Last Updated:
சத்தீஸ்கர் மாநிலத்தில் வீட்டுப்பாடம் செய்ய தவறியதற்காக, ஒரு மாணவனை அவனால் ஒருபோதும் மறக்க முடியாத வகையில் 2 ஆசிரியைகள் தண்டித்து உள்ளனர்.
சத்தீஸ்கரில் உள்ள சூரஜ்பூர் மாவட்டத்தில் இருந்து பெற்றோர்களை கொந்தளிக்க வைக்கும் வகையில் நடந்த சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது. ஹோம் ஒர்க் (வீட்டுப்பாடம்) செய்ய தவறியதற்காக, ஒரு மாணவனை அவனால் ஒருபோதும் மறக்க முடியாத வகையில் 2 ஆசிரியைகள் தண்டித்து உள்ளனர்.
அதிலும் தண்டிக்கப்பட்ட மாணவனின் வயது என்ன தெரியுமா? வெறும் 4 மட்டுமே. ஆம், நான்கு வயது பிஞ்சு மாணவன் ஒருவனே ஆசிரியைகளால் தீவிரமாக தண்டிக்கப்பட்டு உள்ளான். வீட்டுப் பாடத்தை முடிக்காததற்காக தண்டனையாக குறிப்பிட்ட நான்கு வயது மாணவன் தனது பள்ளி வளாகத்திற்குள் ஒரு மரத்தில் தொங்கவிடப்பட்டதுதான் வேதனையின் உச்சம். இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கு மிகவும் கவலையளிக்க கூடியதாக அமைந்துவிட்டது.
இந்தச் சம்பவம் சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் நாராயண்பூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஹான்ஸ் வாஹினி வித்யா மந்திர் என்ற நர்சரிப் பள்ளியில் நடந்துள்ளது. தகவல்களின்படி, குழந்தையின் ஆசிரியை, குறிப்பிட்ட குழந்தை வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதை கண்டறிந்தார். இதனால் கோபமடைந்த அந்த ஆசிரியை வகுப்பறையிலிருந்து அந்த பிஞ்சு மாணவனை வெளியே அழைத்துச் சென்று பின்னர் அந்த குழந்தையின் சட்டையை ஒரு கயிற்றில் கட்டி, பள்ளி வளாகத்திற்குள் உள்ள ஒரு மரத்தில் அந்த கயிற்றோடு சேர்த்து தொங்கவிட்டுள்ளார். இந்த கொடூர தண்டனையை பிஞ்சு மாணவனுக்கு வழங்க அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு ஆசிரியையும் உதவி செய்துள்ளார்.
பள்ளிக்கு அருகில் உள்ள ரூஃப்டாப் ஒன்றின் மீதிருந்து ஒரு இளைஞனால் பதிவு செய்யப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான கொடூரமான வீடியோவானது, காஜல் சாஹு மற்றும் அனுராதா தேவாங்கன் என அடையாளம் காணப்பட்ட இரண்டு ஆசிரியைகள் அருகில் நிற்கும்போது, குறிப்பிட்ட 4 வயது குழந்தை உதவியற்ற முறையில் மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
மேலும், அந்த குழந்தை தன்னை காப்பாற்றச் சொல்லி கதறி அழும் நிலையில், ஆசிரியைகள் எந்த இரக்கமும் காட்டாமல் நிற்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக வைரலானதைத் தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளி நிர்வாகம் தனது “மோசமான தவறை” ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கோரியது.
இதற்கிடையில், மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தொகுதி கல்வி அதிகாரியின் கூற்றுப்படி கிளஸ்டர்-இன்-சார்ஜ், மூத்த மாவட்ட அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். உரிய விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதிர்ஷ்டவசமாக கொடூரமாக தண்டிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாகவும், காயமின்றியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே 2 ஆசிரியைகளால் கொடூரமாக தண்டிக்கப்பட்ட குழந்தையின் உறவினரான சந்தோஷ் சாஹு, என்பவர் தனது குடும்பத்தினர் முறையான புகார் அளிக்கத் தயாராகி வருவதாக கூறினார். “வீட்டுப் பாடத்தை முடிக்காததற்காக ஒரு குழந்தை இப்படி தண்டிக்கப்பட்டால், இந்தப் பள்ளியில் வேறு என்ன நடக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள்” என்று சாஹு தனது பயத்தையும் வெளிப்படுத்தினார்.
November 27, 2025 10:22 PM IST
வீட்டுப்பாடம் முடிக்காத பிஞ்சுக் குழந்தையை கொடூரமாக தண்டித்த ஆசிரியைகள்…! கொந்தளிக்கும் மக்கள்…


