Last Updated:
பாஸ்போர்ட் உட்பட பல்வேறு விதமான அத்தியாவசிய அடையாள ஆவணங்களுக்கு தற்போது ஆதார் சரிபார்ப்பு மற்றும் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் ஆதார் என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணமாக செயல்படுகிறது. 12 இலக்க தனித்துவமான அடையாள எண் கொண்ட இந்த அடையாள அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்குகிறது. இதனை அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றிதழாக ஒருவர் பயன்படுத்தலாம்.
பெரியவர்கள் ஆதாருக்கு விண்ணப்பிக்கும்போது கைரேகை, கருவிழி ரேகை போன்ற பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்யும்போது, குழந்தைகளுக்கு குறிப்பாக இந்த அமைப்பு பால் ஆதார் அட்டையை வழங்குகிறது. இது புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஒரு பிரத்யேகமான ஆதார் வடிவமாகும்.
இதில் குழந்தையின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்களோடு, தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவருடைய ஆதாரோடு இணைக்கப்பட்டிருக்கும். இந்த பால் ஆதாரில் கைரேகை அல்லது கருவிழி ரேகை பதிவு செய்யப்பட்டு இருக்காது.
பாஸ்போர்ட் உட்பட பல்வேறு விதமான அத்தியாவசிய அடையாள ஆவணங்களுக்கு தற்போது ஆதார் சரிபார்ப்பு மற்றும் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உங்களுடைய குழந்தையை நீங்கள் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதற்கான திட்டம் இருந்தாலோ அல்லது எதிர்காலத்தில் எந்தவிதமான சேவைகளையும் சுமூகமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தாலோ அதற்கு பால் ஆதார் ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆனால், இதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இதற்கான செயல்முறை என்பது மிகவும் எளிமையானது.
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் பெறுவது எப்படி?
ஆன்லைன் முறை:
- முதலில் UIDAI வெப்சைட்டுக்குச் செல்லுங்கள். அதில் “மை ஆதார்” என்ற பிரிவின் கீழ் “புக் ஆன் அப்பாயின்மென்ட்” என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
- இதில் உங்களுடைய நகரம், மொபைல் நம்பர் ஆகியவற்றை என்டர் செய்துவிட்டு, OTP மூலமாக சரிபார்ப்பு செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும்.
- உங்கள் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை பார்வையிடுவதற்கான ஒரு தேதியையும், நேரத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இந்த குறிப்பிட்ட அப்பாயின்மென்ட் நாளன்று பெற்றோர் அல்லது பாதுகாவலர் தங்களுடைய பயோமெட்ரிக் விவரங்களை வழங்கிவிட்டு தங்களது ஆதாரை வழங்க வேண்டும்.
- குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதருக்கான விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதன் பிறகு பால் ஆதார் உங்களுடைய வீட்டிற்கு போஸ்ட் மூலமாக அனுப்பப்படும்.
- இந்த விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் UIDAI வெப்சைட்டில் சரிபார்க்கலாம்.
ஆஃப்லைன் முறை:
- இதற்கு நீங்கள் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தையும், குழந்தையின் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
- கூடுதலாக பெற்றோர் பயோமெட்ரிக் மற்றும் அவர்களுடைய ஆதார் விவரங்களையும் வழங்க வேண்டும்.
- இந்த விண்ணப்ப நிலையை சரிபார்ப்பதற்கு உங்களுக்கு என்ரோல்மென்ட் ID அடங்கிய ஒரு ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். வழக்கமாக பால் ஆதார் 60 முதல் 90 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது.
பால் ஆதாருக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அட்டை
- தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டை
- குழந்தையின் ஆதார் தாய் அல்லது தந்தையின் ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டிருக்கும்.
- முகவரி சான்றிதழ்
5 வயதிற்கு பிறகு பயோமெட்ரிக் அப்டேட் செய்வதற்கான அவசியம்: உங்களுடைய குழந்தை 5 வயதை அடைந்த பிறகு அவருடைய கைரேகைகள், கருவிழி ரேகை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும். 5 வயதிற்கு முன்பாக ஆதார் அட்டை எடுத்த குழந்தைகள் அனைவருக்கும் இந்த அப்டேட் கட்டாயமாக செய்யப்பட வேண்டும். மீண்டும் குழந்தை 15 வயதை அடைந்தவுடன் இரண்டாவது பயோமெட்ரிக் அப்டேட் கட்டாயம். இதற்கு ஒரு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும்.
November 27, 2025 6:00 PM IST


