முன்னணி இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும் அவரது நீண்ட நாள் காதலர் பலாஷ் முச்சலுக்கு கடந்த 23 ஆம் தேதி நடைபெறவிருந்த திருமணம அவரது தந்தைக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில், குறிப்பாக ரெடிட் (Reddit) மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில், பலாஷ் வேறொரு பெண்ணுடன் அதாவது நடன பயிற்சியாளர் என்று கூறப்படும் மேரி டி’கோஸ்டா என்பவருடன் பழகியதாகக் கூறி, அவர்களின் தனிப்பட்ட உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்டுகள் வெளிவந்தன.
இந்த விவகாரத்தில் ஸ்மிருதி மந்தனாவை பலாஷ் முச்சல் ஏமாற்றி விட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதற்கிடையே, திருமணத்தை பலாஷ் தான் ஒத்தி வைக்க சொன்னதாகவும், ஸ்மிருதியின் தந்தைக்கு உடல் நலம் குணம் அடையும் வரை திருமணம் வேண்டாம் எனறு அவர் கூறியதாகவும், அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பலாஷின் சகோதரி நீட்டி டாக் இன்றைய தொழில்நுட்பம் மனிதர்களை விட மிகவும் முன்னேறிவிட்டது, அதனால்தான் வதந்திகளின் அடிப்படையில் மக்கள் பலாஷை மதிப்பிடக்கூடாது… அவருக்குப் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்மிருதி மந்தனாவின் திருமண விவகாரத்தில் நடன இயக்குனர் மேரி டி கோஸ்டா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் மற்றும் செய்திகளின்படி, மேரி டி’கோஸ்டா மும்பையைச் சேர்ந்த ஒரு நடனப் பயிற்சியாளர் என்று நம்பப்படுகிறது. ஸ்மிருதி மற்றும் பலாஷ் ஆகியோரின் திருமண விழாவுக்கான நடனங்களை மேற்பார்வையிடும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
பலாஷ் முச்சால் மற்றும் மேரி டி’கோஸ்டா ஆகியோருக்கு இடையேயானதாகக் கூறப்படும் “கிண்டலான உரையாடல்களின்” ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் (குறிப்பாக ரெடிட் தளத்தில்) வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து அவரது பெயர் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த உரையாடல்களில், பலாஷ், ஸ்மிருதியுடனான தனது உறவை “கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது” என்றும், அது ஒரு “நீண்ட தூர உறவு” என்றும் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ஸ்க்ரீன் ஷாட்டுகளின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படாத சூழலில் அவை வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேரி டி கோஸ்டா அதிகம் பிரபலம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
November 26, 2025 6:19 PM IST

