கோலாலம்பூர்:
செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி, நாட்டின் எட்டு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 22,504 பேர் அங்குள்ள 129 நிவாரண மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இருபத்தி நான்கு மாவட்டங்களில் இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று, தேசிய பேரிடர் கட்டளை மையம் (NDCC) தெரிவித்துள்ளது.
இதில் கிளந்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது, வெள்ளம் காரணமாக அங்குள்ள நான்கு மாவட்டங்களில் 3,530 குடும்பங்களைச் சேர்ந்த 9,564 பேர் அவர்களின் வாழ்விடங்களை விட்டு நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர், மேலும் அங்கு 40 நிவாரண மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இதைத் தொடர்ந்து பெர்லிஸ் மாவட்டத்தில் உள்ள 17 மையங்களில் 5,235 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் (1,557 குடும்பங்கள்); பேராக் மாவட்டத்தில் ஏழு நிவாரண மையங்களில் 982 குடும்பங்களைச் சேர்ந்த 3,092 பேர்; சிலாங்கூரில் ஏழு மையங்களில் 775 குடும்பங்களைச் சேர்ந்த 2,868 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் கெடாவில், 543 குடும்பங்களைச் சேர்ந்த 1,629 பேர் 11 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர், பினாங்கில் ஒரு மையத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பகாங்கில் இரண்டு மையங்களில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், திரெங்கானுவில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் ஒரு நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.
The post நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,500 ஆக உயர்வு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

