Last Updated:
ஒரே நாளில் 522 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இன்னும் 8 விக்கெட்டுகளை இழந்தால் இந்திய அணி தோல்வியை தழுவும் என்ற நிலையில், நாளை முழுவதும் தென்னாப்பிரிக்காவின் பவுலிங்கை சமாளித்து தோல்வியை தவிர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்களும், இந்திய அணி 201 ரன்களும் எடுத்திருந்தது. இதையடுத்து 288 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இதனால் 549 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் தேவை.
அதே நேரம் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவதற்கு இன்னும் 8 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்ற சூழல் உள்ளது. ஏற்கனவே இந்திய அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இந்த போட்டியில் டிரா செய்தாலும் தென்னாப்பிரிக்கா அணி தொடரை வென்று விடும். அதே நேரம் ஒரே நாளில் 522 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.
இதனால் நாளை முழுவதும் இந்திய அணி பேட்டிங் செய்து தோல்வியை தவிர்க்குமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
November 25, 2025 9:32 PM IST


