தயாரிப்பாளர் சினிஷ் தன்னுடைய Soldiers Factory தயாரிப்பு நிறுவனம் மூலம், அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ மற்றும் பைனலி பாரத் நடிக்கும் ‘நிஞ்சா ஆகிய படங்களை தயாரிக்கிறார். இப்படங்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித், வெங்கட்பிரபு, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிவா, ஆர்யா என பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:- பல வருடங்களுக்கு முன்பு, நான் சினிஷின் அலுவலகத்தில் இருந்தபோது, திரைத்துறையில் நான் என்னவாக வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டார். அந்த நேரத்தில், நான் தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
அதே நேரத்தில் ‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவியாளராக ஒரு சிறிய நகைச்சுவை வேடத்தில் நடித்தேன். எனக்கு ஹீரோவாக வேண்டும் என்ற உண்மையான லட்சியம் இல்லை, ஆனால் நான் அதைத்தான் விரும்புகிறேன் என்று அவரிடம் சாதாரணமாகச் சொன்னேன். அவர் உடனடியாக, “சிவா, உங்களுக்கு ஏன் இந்த தேவையற்ற வேலை?” என்று கேட்டார், மேலும் எனக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பதாக அவர் உணர்ந்ததால், நான் ஒரு நகைச்சுவை நடிகராகத் தொடர வேண்டும் என்று கூறினார்.
இந்த சம்பவம் எனக்கு மறந்துவிட்டது. நான் ஹீரோவாக நடிக்க தொடங்கிய சில வருடங்கள் கழித்து, அவராகவே என்னை தொடர்புகொண்டு ‘அன்னைக்கு பேசினது எதையும் மனசுல வெச்சிக்காதீங்க’ என்றார். அந்த சம்பவம் நடந்ததையே மறந்துவிட்டு, என் வேலைகளில் கவனமாக இருந்ததால் இவரிடம் பேச முடியாமல் போய்விட்டது. ஆனால் நான் இவர் மேல் கோபமாக இருப்பதாக நினைத்துக் கொண்டார். இவர் இப்படி வெளிப்படையாக பேசக்கூடியவர். அதனால் நிறைய பிரச்சனைகளும் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இன்னுமும் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கிறது. இந்த மாதிரி வெளிப்படையாக பேசக்கூடிய சினிஷை நீங்கள் எப்படி கையாளப்போகிறீர்கள் என்பதுதான் சவால் என்றார்.
இதனிடையே, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




