தம்னர் கிராமத்தில், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி, இசைக்குழு, தகன மைதானம் என முழு சடங்குகளுடனும் விவசாயிகள் வெங்காயத்துக்கு இறுதிச் சடங்கு நடத்தினர். இது அவர்களின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும், அவர்களின் மன உளைச்சலையும் காட்டும் ஓர் உணர்வுப்பூர்வமான தருணமாக மாறியது.
இந்தியாவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் முக்கியப் பகுதிகளில் ஒன்றான மால்வா – நிமார் பகுதியில், மண்டிகளில் வெங்காயம் கிலோவுக்கு ரூ.1 முதல் ரூ.10 வரை மட்டுமே விற்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். பலருக்கு கிலோவுக்கு ரூ.1-2 கூட வழங்கப்படவில்லை. ஆனால், உற்பத்தி செலவுகள் மட்டும் கிலோவுக்கு ரூ.10-12ஆக இருப்பதால், பெரும்பாலான விவசாயிகள் கடனில் சிக்கியுள்ளனர்.
“எங்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. இத்தனை செலவு செய்து பயிரிட்டுள்ளோம். அரசாங்கம் இப்போது எங்களை கவனிக்கவில்லை என்றால், நாங்கள் எங்கே போவோம்?” என்று உள்ளூர் விவசாயியான பத்ரிலால் தாக்கத் கேள்வி எழுப்பியுள்ளார்.
“வெங்காயம் எங்களுக்கு குழந்தை மாதிரி, எங்களது பயிர் முதலில் கனமழையில் நாசமானது. இப்போது மீதமிருந்த இந்தப் பயிருக்கும் போதுமான விலை கிடைக்கவில்லை. அதனால்தான், அதற்கே இறுதிச் சடங்கு செய்தோம்” என்று மற்றொரு விவசாயியான தேவி லால் விஸ்வகர்மா வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.
சிவராஜ் சிங் சவுகான் தற்போது மத்திய வேளாண் அமைச்சராக இருப்பதால், அவரிடம் பலமுறை கோரிக்கை வைத்தபோதும், எந்தத் தீர்வும் இதுவரையில் எட்டப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். விவசாயிகளிடமிருந்து மனுவைப் பெற்ற தாசில்தார் ரோஹித் சிங் ராஜ்புத், “அரசின் ஆதரவு விலையை விவசாயிகள் கோருகின்றனர். இது கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு, மாநில அரசுக்கும் அனுப்பப்படும்” என்று கூறியுள்ளார்.
November 25, 2025 5:12 PM IST

