Last Updated:
நீட் முதுநிலை தேர்வில் போலி EWS சான்றிதழ் மூலம் 140 பேர் அதிக கட்டண மருத்துவ படிப்புகளில் சேர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒரு கோடி ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டிய முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்திருக்கும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நீட் முதுநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் இடங்களை ஒதுக்கீடு செய்யும் பணி முதல் கட்டமாக முடிந்துள்ளது.
இந்நிலையில் இந்த தேர்வில் EWS எனப்படும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த முன்னேறிய வகுப்புப் பிரிவு சான்றிதழுடன் பங்கேற்று, தரவரிசையில் பின்தங்கிய மாணவர்களில் சுமார் 140 பேர் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய மருத்துவ படிப்புகளில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மேலாண்மை மற்றும் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டின் கீழ் இவர்கள் சேர்ந்துள்ளனர். முதலில் வருமானத்தில் பின்தங்கியவர்களாக இருந்தவர்கள், தற்போது எப்படி என்.ஆர்.ஐ. ஆனார்கள் என பலர் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.
நீட் முதுநிலை தேர்வு தரவரிசையில் ஒரு லட்சத்தி 10 ஆயிரமாவது இடத்திற்கு கீழ் சென்ற மாணவர் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் பெலகாவியில் உள்ள மருத்துவ கல்லூரியில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலுத்தி படிக்கும் தோல் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளார்.
இதேபோல புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் ஒரு மாணவர் ஆண்டுக்கு 55 லட்சம் ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டிய பொது மருத்துவ படிப்பில் சேர்ந்திருக்கிறார். இதுபோன்று கடந்த முறையும் நடந்த நிலையில், பலர் போலியாக EWS சான்றிதழ் கொடுத்து இடஒதுக்கீட்டில் சேருவதால் தகுதியான மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
November 25, 2025 3:28 PM IST


