வரி… பிரச்னை… சமாதானம்… ரிப்பீட்டு – இப்படி தான் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா – சீனா உறவு இருந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம், சீனா மீது அதிக வரிகளை விதித்தார் ட்ரம்ப். அதன் பிறகு சமாதானம் ஆகி, அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது… அது வெற்றிகரமாக நடந்து வருவதாகவே தகவல்கள் பரவின… இரு நாடுகளும் அதை தான் சொன்னது.
அந்த நேரத்தில்தான், சீனா தங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், கோபமுற்ற ட்ரம்ப், சீனா மீது 100 சதவிகித வரி விதிக்க இருப்பதாக எச்சரித்தார்.
அதன் பின், அதே மாத கடைசியில், ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாலும், அது முக்கியமாகப் பார்க்கப்பட்டது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது. ஆக, இப்போது அமெரிக்கா, சீனா உறவு சமாதான படலத்தில் உள்ளது.

