Last Updated:
பாகிஸ்தான் பெஷாவர் ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் ராணுவ தலைமையகத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு நகரான பெஷாவரில் அந்நாட்டு ராணுவத் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு, தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள முக்கிய நுழைவு வாயில் பகுதியில் ஒரு தாக்குதலையும், வளாகத்திற்குள்ளே மற்றொரு தாக்குதலையும் நடத்தியுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்ததாகவும், 4 பேர் படுகாயமடைந்ததாகவும் பெஷாவர் காவல்துறைத் தலைவர் மியான் சயீத் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ராணுவ தலைமையகத்திற்குள் சில தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், அங்கு ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவ தலைமையகத்திற்கு வெளியே உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன.
நடப்பாண்டின் தொடக்கத்தில் குவெட்டாவில் உள்ள துணை ராணுவ தலைமையகத்திற்கு வெளியே ஒரு சக்திவாய்ந்த கார் குண்டு வெடித்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
November 24, 2025 5:51 PM IST
பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்


