Last Updated:
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி வழியாக இயக்கப்படும் இந்த விமானத்தில் ரோஹித் உடன், ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் விமானி உட்பட இருவர் பயணித்துள்ளனர்.
பெங்களூருவில் பைவ் ஸ்டார் ஓட்டலில் வைத்து பெண் விமானி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வாடகை விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தனியாருக்கு சொந்தமான ஒரு விமானத்தை 60 வயதான ரோஹித் ஷரன் என்ற விமானி இயக்கியுள்ளார். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி வழியாக இயக்கப்படும் இந்த விமானத்தில் ரோஹித் உடன், ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் விமானி உட்பட இருவர் பயணித்துள்ளனர்.
இவர்கள், வேறொரு விமானத்தை இயக்க வேண்டி இருந்ததால் இடைப்பட்ட நேரத்தில் பெங்களூருவில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அப்போது, சீனியர் விமானியான ரோஹித், பெண் விமானியை வெளியே அழைத்துள்ளார். அதை ஏற்றுக்கொண்டு வெளியே சென்றவர்கள் மீண்டும் அறைக்கு திரும்பியுள்ளனர். ஹோட்டலுக்கு திரும்பியதும் ரோஹித், இளம்பெண் தங்கியிருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அதைக் கண்ட இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்ற சீனியர் விமானி, அந்த பெண்ணை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்யதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், சம்பவம் நிகழ்ந்தது பெங்களூரு என்பதால் வழக்கு அங்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 60 வயதான சீனியர் விமானி இந்த பெண்ணிடம் மட்டும் தான் அத்துமீறினாரா? அல்லது வேறு பெண்களிடமும் எல்லை மீறினாரா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 60 வயதான விமானி ஒருவர், தன்னுடன் பணியாற்றும் பெண் விமானியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
November 24, 2025 5:41 PM IST
இளம்பெண் விமானி பாலியல் வன்கொடுமை.. 60 வயதான சீனியர் விமானி அத்துமீறல்.. 5 ஸ்டார் ஹோட்டலில் நடந்த அதிர்ச்சி!


