Last Updated:
இருக்கைகள் கூட இல்லாத பள்ளியில் படித்து தற்போது நாட்டின் மதிப்புமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருக்கைக்கு சென்றிருக்கிறார் சூர்யகாந்த்..
நீதித்துறையின் உயரிய பதவியான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு ஹரியானா மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார் நீதிபதி சூர்ய காந்த். அந்த மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் இருக்கும் பெட்வார் என்ற கிராமத்தில் பிறந்த சூர்ய காந்த், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கேயே முடித்தார்.
1984ஆம் ஆண்டு ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த சூர்யகாந்த், பின்னர் அங்கிருந்து சண்டிகருக்கு சென்றார். தொடர்ந்து, பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞராக இருந்தார். 2000ஆம் ஆண்டு ஹரியானாவின் வழக்கறிஞர் ஜெனராலாக நியமிக்கப்பட்டார். அந்த பொறுப்புக்கு தேர்வான இளம் வழக்கறிஞர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
2018ஆம் இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட சூர்யகாந்த் முக்கிய வழக்குகளை விசாரித்த அமர்வுகளில் இடம்பிடித்தார். 2021ஆம் ஆண்டு பெகாசஸ் வழக்கில் ஒட்டுக்கேட்பு தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைத்து உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்விலும் இடம் பெற்றார்.
2022ஆம் ஆண்டு காலனித்துவ கால தேசத்துரோக சட்டத்தை நிறுத்தி வைத்த அமர்வில் இருந்த சூர்யகாந்த், 2023ஆம் ஆண்டு 370ஆவது சட்டப்பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிய தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற அமர்விலும் இருந்தார். பிகாரில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், அவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி சூர்ய்காந்த் உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்ற பார் சங்கம் உட்பட அனைத்து பார் சங்கங்களிலும் பெண்களுக்க 3ல் ஒரு பங்கு இடத்தை ஒதுக்கி உத்தரவிட்டு நீதித்துறையில் பாலின சமத்துவத்துக்கு வழிவகுத்தார். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த பிஆர் கவாய் ஓய்வுப்பெற்ற நிலையில், 53ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு டெல்லியில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
வரும் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வரை தலைமை நீதிபதி சூர்ய காந்த் பொறுப்பில் இருப்பார். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 90 ஆயிரம் வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பது தான் தன் முன் இருக்கும் சாவல்களில் மிக கடினமானது என அவர் தெரிவித்திருக்கிறார். பெட்வார் கிராமத்தின் அடையாளமாக மாறி உள்ள தலைமை நீதிபதி சூர்யகாந்த்துக்கு வாழத்துகள் குவிந்து வருகின்றன..
November 24, 2025 12:39 PM IST
அன்று இருக்கை கூட இல்லாத பள்ளியில் கல்வி.. இன்று நாட்டின் தலைமை நீதிபதி.. யார் இந்த சூர்ய காந்த்?


