Last Updated:
பிரிட்டன் வரிவிதிப்பு காரணமாக தொழிலதிபர் லட்சுமி மிட்டல் துபாய்க்கு இடம்பெயர உள்ளார். அவருக்கு துபாயில் மாளிகை, நயா தீவில் நிலம் உள்ளது.
அதிக வரிவிதிப்பு திட்டம் காரணமாக பிரிட்டனை விட்டு தொழிலதிபர் லட்சுமி மிட்டல் வெளியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த லட்சுமி மிட்டல், 1980களின் இறுதியில் பிரிட்டன் சென்று லண்டன்வாசியானார். அங்கிருந்து தனது உருக்கு உலை தொழிலை லட்சுமி மிட்டல் விரிவுப்படுத்திய நிலையில், ஆர்சிலோர் மிட்டல் என்ற அவருக்கு சொந்தமான உருக்கு ஆலை நிறுவனம் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் விரிவடைந்துள்ளது. இவரது நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக சொல்லப்படுகிறது.
இதன் மூலம் பிரிட்டனின் எட்டாவது பெரிய பணக்காரராக லட்சுமி மிட்டல் உள்ளார். தற்போது மற்றொரு ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் வசிக்கிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு தொழிலதிபர்களுக்கு பல்வேறு வரிகளை பிரிட்டன் அரசு உயர்த்தியது. குடும்ப தொழிலை வாரிசுகளுக்கு கைமாற்றினால் அதற்கு வாரிசு வரி செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல புதிய வரிகளையும் அறிமுகப்படுத்தியது.
மேலும், வரும் புதன்கிழமையன்று தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் பிரிட்டனை விட்டு வெளியேறும் தொழிலதிபர்களுக்கு 20 சதவீத வெளியேறும் வரி விதிக்க நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் திட்ட மிட்டுள்ளதாக செய்தி வெளியானது. இத்தகைய வரி விதிப்புகளால் லட்சுமி மிட்டல் துபாய்க்கு இடம்பெயர உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு துபாயில் ஏற்கனவே ஒரு மாளிகை உள்ளதாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அருகிலுள்ள நயா தீவில் நிலங்கள் வாங்கி போட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
November 24, 2025 11:53 AM IST
பிரிட்டனை விட்டு வெளியேறும் தொழிலதிபர் லட்சுமி மிட்டல்? அடுத்து இந்த நாட்டிற்கு செல்ல முடிவு


