கோலாலம்பூர், நவம்பர் 24:
ஜோகூர் கல்லறையில் ஒரு நபர் ‘சிலாட்’ போன்ற அசைவுகளைச் செய்த காணொளி பரவியதைத் தொடர்ந்து, பிரதமர் துறை சமய விவகார துறை அமைச்சர் டத்தோ முகமட் நயிம் மொக்தார், நேற்று கூறுகையில் அனுதாபத்துடனும், விழிப்புடனும் இருக்குமாறு விசாரணை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நபரின் நடவடிக்கைகள், அடக்கம் செய்யும் இடங்களில் நடைமுறைகள் மற்றும் மரியாதை குறித்துப் பொதுமக்களிடையேக் கவலையை ஏற்படுத்தினாலும், சமயச் சட்டம் அல்லது ஒழுக்கம் என்ற விடயங்களைத் தாண்டி, அவரது நல்வாழ்வு மற்றும் உளவியல் ஆதரவின் தேவையை பரிசீலிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
குளுவாங் மாவட்ட காடி அலுவலகத்தை விவகாரத்தை விசாரிக்குமாறுப் பணித்த ஜோகூர் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழுவின் விரைவான நடவடிக்கையை அவர் வரவேற்றார்.
அத்துடன், மலேசியா மடானி உணர்வுக்கு ஏற்ப, இந்தச் சம்பவத்தை விவேகத்துடனும், மனிதாபிமானத்துடனும் கையாள மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுக்கு இடையேயானத் தொடர்ச்சியான ஒத்துழைப்பை அவர் உறுதியளித்ததுடன், ஊகங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.




