காயம் காரணமாக அவதியுறும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், எப்போது அணிக்கு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பேட்டிங் செய்ய வந்த ஷுப்மன் கில், கழுத்து வலி காரணமாக பாதியிலேயே வெளியேறினார். முக்கியமான சேஸிங்கில் அவர் இல்லாததும் இந்திய அணி தோல்வியைத் தழுவ முக்கிய காரணமாக இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் கழுத்துப் பட்டை அணிந்தபடி 2ஆவது போட்டி நடைபெறும் கவுகாத்திக்குச் சென்றார்.
எனினும் அவர் அப்போட்டியில் விளையாடத் தேர்வாகவில்லை. இந்நிலையில் மும்பை சென்ற கில், பிரபல முதுகுத்தண்டவட சிகிச்சை நிபுணர் அபய் நேனேவிடம் சிகிச்சை பெற்று வருகிறார். பரிசோதனையில் கில்லுக்கு கழுத்து நரம்பில் காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
தற்போது ஒரு ஊசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது. அந்த ஓய்வுக் காலம் முடிந்தபிறகு, காயத்தில் இருந்து மீள்வதற்கான மருத்துவ நடவடிக்கைகள் தொடங்கும். அதனால் ஷுப்மன் கில் மீண்டும் களத்திற்கு திரும்புவது மேலும் தாமதமாகும் எனத் தெரிகிறது. அதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. அதனால், 2026-இல் தான் அவர் அணிக்குத் திரும்பக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கேப்டனை அறிவித்துள்ளது பிசிசிஐ. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. வரும் 30 ஆம் தேதி தொடங்கவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷுப்மன் கில்லுக்கு பதிலாக கே.எல். ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.
இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரெல்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
November 23, 2025 9:49 PM IST

