Last Updated:
புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசிய சீமான் மீது கொலை மிரட்டல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரியில், செய்தியாளரை ஒருமையில் பேசிய விவகாரத்தில் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுவை விற்று நலத்திட்டங்கள் செய்வதை ஏற்க முடியாது என்றார். நாம் தமிழர் கட்சி ஆட்சியில் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்படும் எனவும், புதுச்சேரியில் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், மெட்ரோ ரயில் திட்டம் தோல்வியுற்ற திட்டம் என விமர்சித்தார்.
அப்போது, சீமானுக்கும் கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருமையில் பேசிய சீமான், திடீரென எழுந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கேள்வி எழுப்பிய செய்தியாளரை நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து வெளியேற்றினர்.
இந்நிலையில், செய்தியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் புதுச்சேரி, வில்லியனூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதன்படி, செய்தியாளரை அவதூறாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் ஆதரவாளர்களை வைத்து தாக்கியது என மூன்று பிரிவுகளின் கீழ் சீமான் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Puducherry (Pondicherry)
November 23, 2025 9:41 PM IST


