சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கொலை வழக்கில், 20 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், பவாரியா கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த ராகேஷ், அசோக், ஜெகதீஷ் ஆகிய மூவரையும் குற்றவாளிகள் என நவம்பர் 21 ஆம் தேதி அறிவித்தது.
சுதர்சனம், 2001–06 காலப்பகுதியில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக பணியாற்றியவர். அவர் சென்னையின் அருகே தானாக்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 2005 ஜனவரி 9 ஆம் தேதி நள்ளிரவில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் அவரது இல்லத்தில் புகுந்து, சுட்டுக் கொலை செய்து, நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றனர்.
இந்த வழக்கில், ஓம் பிரகாஷ் உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணைக்காலத்தில், ஓம் பிரகாஷ் உட்பட இருவர் சிறையில் உயிரிழந்தனர். பிணையில் விடுவிக்கப்பட்ட மூன்று பெண்கள் பின்னர் தலைமறைவாகினர். ஜெகதீஷ் உள்ளிட்ட நான்கு பேரின் வழக்கு மட்டும் கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆபிரகாம் லிங்கன், 84 சாட்சியங்களை கேட்டு, நூற்றுக்கணக்கான சான்றுகளை ஆய்வு செய்து, மூன்று பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயில்தார் சிங் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
குற்றவாளிகளுக்கான தண்டனை நவம்பர் 24 அன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.




