Last Updated:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாமக்கல் மண்டலத்தில் புதிய உச்சமாக ஒரு முட்டையின் விலை ரூ.6.10ஆக NECC நிர்ணயம் செய்துள்ளது. வட மாநிலங்களில் நிலவும் குளிர், உற்பத்தி சரிவு காரணமாக முட்டை விலை உயர்ந்து வருவதாகக் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப் பண்ணைகள் மூலம் நாள்தோறும் 6.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி, வட மாநிலங்களுக்கு அனுப்புதல், சத்துணவு, அங்கன்வாடி மையங்களுக்கு விநியோகம், உள்ளூர் தேவை மற்றும் இதர பயன்பாடு என முட்டைகள் அனைத்தும் பிரித்து அனுப்பப்படுகின்றன.
வழக்கமாகக் குளிர்காலங்களில் முட்டை விற்பனை அதிகரித்துக் காணப்படும். அதனால், விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கும். அந்தவகையில், அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய நிலையில் ரூ.6.50 ஆக இருந்த முட்டை விலை 5 காசுகள் வீதம் படிப்படியாக உயர்ந்து வந்தது. முட்டை வரலாற்றில் இதுவரை ரூ.5.90 தான் அதிகப்படியான விலை எனக் கூறப்படுகிறது.
தற்போது அதைக் கடந்து ஒரு முட்டை விலை 5 காசு உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் கூறுகையில், “வெளிநாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
வட மாநிலங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்திருப்பதும், தமிழகத்தில் பெய்துவரும் மழையால் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதும் முட்டை விலை புதிய உச்சம் தொடுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு முட்டை விலை அதிகபட்சமாக 5.90 ஆக இருந்தது. தற்போது 6 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதுவே முட்டை வரலாற்றிலேயே மிக அதிக கொள்முதல் விலை ஆகும்.
சில்லறை விற்பனையில் 7 ரூபாய் வரை விற்க கூடும். அதே நேரத்தில் உள்ளூர் விற்பனை சூடு பிடிக்கும். வரும் நாள்களில் இந்த விலை மேலும் உயரும். கார்த்திகை மாதம் பிறந்தாலும், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தாலும் முட்டை விற்பனை பெரிய அளவில் சரிவடையாது.
தற்போது அதிக நாட்கள் யாரும் விரதம் இருப்பதில்லை. ஓரிரு வாரங்களில் சபரிமலை சென்று திரும்பிவிடுகின்றனர். இதனால் முட்டை விலை சரிவடையாது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் முட்டை விற்பனை சீராகவே இருந்தது. இதனால் முட்டை விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.
Namakkal,Tamil Nadu
November 22, 2025 10:50 AM IST

