
களுத்துறை பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் ஒரு பெரும்பான்மை வாக்குகளால் வியாழக்கிழமை (20) தோற்கடிக்கப்பட்டது.
சபையில் அதிகாரம் கொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சி ( NPP ) யின் தவிசாளர் அருண பிரசாத் வரவு -செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.
அது நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சஞ்சீவ லலீந்திர வாக்கெடுப்பைக் கோரினார், அதை பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர் நிலந்த சந்திரலால் வழிமொழிந்தார்.
பின்னர், செயலாளர் எரங்க தேவபுர வாக்கெடுப்பை நடத்தினார், அதில் பட்ஜெட்டுக்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் 15 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், சபையில் உள்ள மற்ற கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் அதற்கு எதிராக வாக்களித்தனர்.

