அடுத்தாண்டு ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறுகிறது. 48 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. கண்டங்கள் மற்றும் பிராந்தியங்கள் வாரியாக நடைபெறும் தகுதிச்சுற்றிப் போட்டியில், வடக்கு-மத்திய அமெரிக்கா, கரிபீயன் தீவுகளை உள்ளடக்கிய நாடுகள் கன்காகாஃப் (CONCACAF) என்று அழைக்கப்படும் பிரிவுன் கீழ் மோதுகின்றன.
இதில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள கியூரசாவ் தனது இறுதி போட்டியில் ஜமைக்காவுடன் மோதியது. ஏற்கெனவே இப்பிரிவில் முதல் இடத்தில் இருந்த கியூரசாவ், தான் கோல் அடிக்காவிட்டாலும் பரவாயில்லை, 2 ஆவது இடத்தில் உள்ள ஜமைக்கா கோல் அடிக்காமல் பார்த்துக் கொண்டால் போதும் என்ற முனைப்புடன் விளையாடியது. இதற்கு கை மேல் பலன் கிடைத்ததை போன்று, இரு அணிகளும் கோல் எதுவும் எடுக்காமல் ஆட்டம் டிரா ஆனது. இதன் மூலம், உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு என்ற பெருமையை கியூரசாவ் பெற்றுள்ளது.
சுமார் 450 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட கியூரசாவ், இந்த சாதனையை நிகழ்த்த பல்வேறு அம்சங்கள் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
2010ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்து ஆளுகைக்கு உட்பட்ட தனி நாடாக கியூரசா உருவானது. சுமார் ஒன்றரை லட்சம் பேர் வசிக்கும் இந்த தீவில், நெதர்லாந்தை பூர்விகமாக கொண்ட பலர் இடம்பெயர்ந்தனர். அண்மையில் உலக கோப்பை கால்பந்து அணியில் மற்ற நாட்டு லீக் அணியில் விளையாடிய வீரர்களில் 5 பேரை தேசிய அணியில் சேர்த்துக் கொள்ள ஃபிபா வழிவகை செய்தது. அதன் படி, 21 வயதுக்கு உட்பட்ட நெதர்லாந்து அணியில் விளையாடிய வீரர்கள், கியூரசாவிற்காக விளையாட களம் இறங்கினர். அதில், குறிப்பாக, தஹித் ஜோங் என்பவரின் ஆட்டம் கியூரசா அணிக்கு யானை பலமாக அமைந்தது.
மேலும், கியூரசாவ் கால்பந்து அணியின் பயிற்சியாளரான டிக் அட்வோகாட்டிற்கும் (Dick Advocaat) இந்த சாதனையில் பெரும் பங்கு உண்டு. நெதர்லாந்தை பூர்விகமாக கொண்ட அவர், ரஷ்யா, பெல்ஜியம் உள்ளிட்ட நாட்டின் கால்பந்து அணிகளை நிர்வகித்த அனுபவம் கொண்டவர். வயது மூப்பு காரணமாக சர்வதேச அரங்கில் ஓரங்கப்பட்ட அட்வோகாட், இளம் கியூரசா அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்று அதனை உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற வைத்துள்ளார்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தகுதி சுற்றுக்கான இறுதி போட்டியில் கியூரசா விளையாடிக் கொண்டு இருந்த போது, தனிப்பட்ட பிரச்னை காரணமாக, டிக் அட்வோகாட் நெதர்லாந்திற்கு சென்று விட்டார். அதாவது பயிற்சியாளர் இன்றியே கியூரசா தனது இறுதிப்போட்டியை எதிர்கொண்டது. இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்ற உலகின் மிகச்சிறிய நாடை வழிநடத்தப்போகும் வயதான பயிற்சியாளர் டிக் அட்வோகாட் என்பதும் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தியா மற்றும் சீனா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தகுதி பெறவில்லை. ஆசிய கண்டத்தில் உள்ள வலுவான போட்டி அணிகள், சரியான பயிற்சி அமைப்பு இல்லாதது உள்ளிட்டவை இதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
எது எப்படியோ, தனது மக்கள் தொகையில் பாதியை விட அதிக இருக்கைகள் கொண்ட நியூ ஜெர்சி மெட் லைஃப் மைதானத்தில், இறுதி போட்டியை விளையாடி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் களம் இறங்கும் கியூரசாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன…
November 20, 2025 10:29 AM IST

