Last Updated:
மனோகர் லால் கட்டார், மு.க.ஸ்டாலின் கோவை மதுரை மெட்ரோ திட்டங்களில் அரசியல் செய்கிறார் என குற்றம் சாட்டினார்; திட்ட அறிக்கைகளில் பிழைகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், எந்த மாநிலத்திற்கும் இல்லாத வகையில், சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதனை புறந்தள்ளி விட்டு, மெட்ரோ கொள்கை 2017-ன் படி, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையை விட குறைந்த நீளமுள்ள கோவை மெட்ரோ ரயிலில், சென்னையை விட அதிகம் பேர் பயணிப்பார்கள் என்று திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டு இருப்பதாக மனோகர் லால் கட்டார் குறிப்பிட்டுள்ளார். அதாவது, கோவை மாநகராட்சியில் 15 லட்சத்து 85 ஆயிரம் வசிக்கும் நிலையில், மெட்ரோவிற்கான திட்டமிடல் பகுதியில் 7 லட்சத்து 7 ஆயிரம் பேர் மட்டுமே வசிப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால், மெட்ரோ ரயிலில், மாநகராட்சியின் மக்கள் தொகையை விட 5 மடங்கு அதிகம் பேர் பயணிப்பதாக திட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாகவும், அதனை நியாப்படுத்தவில்லை என்றும் மனோகர் லால் கட்டார் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட தூரத்தை சாலை மார்க்கமாக செல்வதற்கும், மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்குமான நேர வித்தியாசம், மெட்ரோ திட்டத்திற்கான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கோவைக்கான திட்ட அறிக்கையில் உள்ள 7 வழித்தடங்களில் போதுமான இட வசதி கூட இல்லை என்றும் மனோகர் லால் கட்டார் தனது எக்ஸ் பதிவு வாயிலாக கூறியுள்ளார்.
மதுரைக்கான விரிவான திட்ட அறிக்கையைப்படி, அங்கு BRTS எனப்படும் பேருந்து வெகுவிரைவு வழித்தடமே போதுமானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அனைத்திற்கும் மேலாக, 10 ஆயிரம் மின்சாரம் பேருந்துகளை வழங்கும் மத்திய அரசின் திட்டத்திலும் தமிழ்நாடு இணைய மறுப்பதாக மனோகர் லால் கட்டார் குற்றம்சாட்டியுள்ளார்.
November 20, 2025 10:45 AM IST
“மெட்ரோ விவகாரத்தில் அரசியல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” மத்திய அமைச்சர் மனோகர் லால் குற்றச்சாட்டு


