Last Updated:
பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும், பிகார் முதலமைச்சராகவும் நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய அரசு அமைப்பதற்கான பணிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி துரிதப்படுத்தியுள்ளது.
பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டப்பேரவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.
இந்நிலையில், இன்று ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பாட்னாவில் உள்ள அக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இல்லத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவரான நிதிஷ்குமார் சட்டப்பேரவை தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேபோல், இன்று பாட்னாவில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாஜக மேலிட பார்வையாளராக உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பிகார் பாஜக சட்டப்பேரவை தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும், பிகார் முதலமைச்சராகவும் நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இன்று மாலை பிகார் ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து, ஆட்சி அமைக்க நிதிஷ் குமார் உரிமை கோர இருக்கிறார்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நாளை (20ஆம் தேதி) பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. இந்தப் பதவியேற்பு விழாவில் 10 ஆவது முறையாக முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்க இருக்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
November 19, 2025 4:55 PM IST
10வது முறையாக முதல்வர் பதவி ஏற்கிறார் நிதிஷ் குமார்… இன்று மாலையே ஆளுநரை சந்தித்து உரிமை கோருகிறார்


