Last Updated:
புதிய இ-பாஸ்போர்ட்கள் பார்ப்பதற்கு பழைய பாஸ்போர்ட்களை போலவே இருந்தாலும், கவரில் கொடுக்கப்பட்டிருக்கும் அசோகா சின்னத்திற்கு கீழே இப்போது ஒரு சிப் உள்ளது.
பாஸ்போர்ட் தொடர்பான பாதுகாப்பு தரங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) நாடு முழுவதும் இ-பாஸ்போர்ட்களை வழங்கத் தொடங்கியுள்ளது. இதன்படி மே 28, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த அல்லது புதுப்பித்த எவருக்கும் இ-பாஸ்போர்ட் கிடைக்கும். ஜூன் 2035க்குள் இ-பாஸ்போர்ட்டுகளுக்கு முழுமையாக மாற அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய இ-பாஸ்போர்ட்கள் பார்ப்பதற்கு பழைய பாஸ்போர்ட்களை போலவே இருந்தாலும், கவரில் கொடுக்கப்பட்டிருக்கும் அசோகா சின்னத்திற்கு கீழே இப்போது ஒரு சிப் உள்ளது. இந்த சிப்பில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் தொடர்பான அனைத்து தகவல்களும் சேமிக்கப்படுகின்றன. எனவே, இந்த இ-பாஸ்போர்ட்கள், போலி பாஸ்போர்ட்களின் பயன்பாட்டை தடுக்கும். மேலும், விமான நிலையங்களில் இமிகிரேஷன் நடைமுறைகளையும் விரைவாக செய்து முடிக்க உதவும்.
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் தூதரகம், பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவின் செயலாளர் அருண் குமார் சாட்டர்ஜி இது குறித்து பேசுகையில், புதிய இ-பாஸ்போர்ட்கள் வசதியானவை, பாதுகாப்பானவை, விமான நிலையங்களில் பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன மற்றும் சர்வதேச விமான விதிமுறைகளுக்கு இணங்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக இ-பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இனி விமான நிலைய இமிகிரேஷன் கவுன்டர்களில் சரிபார்ப்புக்காக நீண்ட நேரம் செலவிட வேண்டியதில்லை.
புதிய இ-பாஸ்போர்ட் மூலம், என்ட்ரி கேட்டில் உள்ள டச்ஸ்கிரீனில் இ-சிப்பை வைத்தால் போதும், கதவுகள் திறக்கும். அதேபோல், “இமிகிரேஷன் அதிகாரிகள் இனி எல்லாவற்றையும் மேனுவலாக சரிபார்க்க வேண்டியதில்லை. இது இந்திய விமான நிலையங்களில் டிஜிட்டல் பயணத்திற்கான உலகளாவிய தரநிலையான Trusted Traveller திட்டத்தின் ஒரு பகுதியாகும்” என்று அருண் குமார் கூறினார்.
இதுவரை, இந்தியா முழுவதும் சுமார் 80 லட்சம் இ-பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 60,000 இ-பாஸ்போர்ட்டுகள் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களால் வழங்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் செயல்முறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்ற, ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் பாஸ்போர்ட் சேவா கேந்திர மையங்களை அமைச்சகம் திறந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 511 தொகுதிகளில் பாஸ்போர்ட் மையங்கள் உள்ளன, மீதமுள்ள 32 தொகுதிகளில் விரைவில் பாஸ்போர்ட் மையங்கள் அமைக்கப்படும். பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையை எளிதாகவும், குடிமக்களுக்கு ஏற்றதாகவும் மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறி இருக்கிறது.
November 19, 2025 3:50 PM IST
நாடு முழுவதும் அறிமுகமான இ-பாஸ்போர்ட்கள்…! பழைய பாஸ்போர்ட்டுக்கும், இ-பாஸ்போர்ட்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன…?


