Last Updated:
ஜம்மு-காஷ்மீரில் போஸ்டர்கள் விவகாரத்தில் ஹரியானா பரிதாபாத்தில் 350 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல், அடில் அகமது, முஜாமில் ஷகில் உள்பட 7 பேர் கைது.
காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆதரவாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரியானாவில் 350 கிலோ வெடிபொருட்களை காவல்துறை பறிமுதல் செய்தது.
கடந்த 27-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், கடந்த வாரம் உத்தரபிரதேசத்தின் சாஹரான்பூரில் அடில் அகமது என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
அவர் ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சோதனை செய்தபோது, அடில் அகமதுவுக்கு சொந்தமான லாக்கரில் இருந்து ஏ.கே 47 வகை துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து, அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் வசித்து வரும் மற்றொரு மருத்துவரான முஜாமில் ஷகில் என்பவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, 350 கிலோ வெடிமருந்துகள், டைமர்கள் மற்றும் துப்பாக்கி, பேட்டரிகள், வாக்கி டாக்கிகள், 12 சூட்கேஸ்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
முஜாமில் ஷகில் பரிதாபாத்தில் உள்ள அல் ஃபாலா என்ற தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்துள்ளார். அந்தக் கல்லூரி வளைகுடா நாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதி உதவி மூலம் செயல்பட்டு வந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
அடில் அகமது, முஜாமில் ஷகில் ஆகியோர் சிலீப்பர் செல்லாக இருக்கலாம் என்றும் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முஜாமில் அகமது என்ற மேலும் ஒரு டாக்டர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று மாலை சுமார் 6 மணி அளவில் டெல்லி செங்கோட்டை அருகே, மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் இருந்த கார் பார்க்கிங்கில் இருந்த இரண்டு கார்கள் திடீரென வெடித்து சிதறின. இந்த விபத்தில் இதுவரை 13 வாகனங்கள் சேதம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இது திட்டமிட்ட வெடி விபத்தா அல்லது கார் சிலிண்டர் வெடி விபத்தா எனும் கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். அதேசமயம், இதுவரை ஹரியானாவில் கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்களுக்கும், கைதுக்கும், டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடி விபத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
November 10, 2025 7:51 PM IST


