Last Updated:
பன்னேர்கட்டா தேசிய பூங்காவில் சஃபாரி பேருந்தில் வஹிதா பானு மீது சிறுத்தை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பரிசீலனையில் உள்ளது.
கர்நாடகாவில் உள்ள பன்னேர்கட்டா தேசிய பூங்காவில் சஃபாரி பயணத்தின் போது சிறுத்தை ஒன்று பேருந்தில் இருந்த பெண் ஒருவரை தாக்கியதில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவின் பன்னேர்கட்டா தேசிய பூங்காவில் சஃபாரி சவாரியில் இருந்த ஒரு பெண் மீது சிறுத்தை பாய்ந்து தாக்க முயன்ற பரபரப்பான நொடிகள் கேமராவில் பதிவாகிய நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சஃபாரி பேருந்தின் வலையால் மூடப்பட்ட ஜன்னல் வழியாக சிறுத்தை அந்தப் பெண்ணைத் தாக்க முயன்றதில் அவருக்கு லேசோன காயம் ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வஹிதா பானு (50) என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்தப் பெண், கடந்த வியாழக்கிழமை பிற்பகல் அன்று பன்னேர்கட்டா தேசிய பூங்காவில் சஃபாரி பயணத்தின் போது இந்த சம்பவம் நடந்தது. காயம் ஏற்பட்டவுடன், அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அடுத்தகட்ட சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், சிறுத்தைகள் ஆங்காங்கு படுத்துக் கொண்டிருக்க, சஃபாரி பேருந்து அதற்கிடையே சாலையில் செல்வதைக் காண முடிகிறது. பயணிகள் பார்ப்பதற்காக சிறுத்தைகள் கூடியிருக்கும் இடமொன்றில் அந்த பேருந்தை ஓட்டுநர் நிறுத்துகிறார். ஆனால், சிறுத்தைகள் பெரும்பாலும் சஃபாரி பேருந்தை கண்டுகொள்ளாமல் இருந்தன. திடீரென்று, அங்கிருந்த சிறுத்தை ஒன்று வேகமாக பேருந்துக்கு அருகே வந்து, வலையால் மூடப்பட்டிருந்த ஜன்னல் வழியாக உள்ளே தலையை நீட்டி, அந்த பெண்ணை நோக்கி பாய முயல்வது போல் தெரிகிறது.
இதையடுத்து, பேருந்தில் இருந்தவர்கள் வேகமாக விரைந்து அந்த பெண்ணை காப்பாற்றி பாதுகாப்பாக உட்கார வைக்கின்றனர். அந்த பெண்ணின் ஆடையை அந்த சிறுத்தை தனது வாயால் கவ்வி இழுத்திருக்கிறது போலும், ஏனெனில், கடைசியாக அந்த சிறுத்தை இளஞ்சிவப்பு நிற துணி ஒன்றை வாயில் கவ்விய படி தரையில் உட்கார்ந்த அதை மோப்பம் பிடிப்பதை வீடியோவின் மூலம் காண முடிகிறது.
சஃபாரி பேருந்துகளில் பயணிகளை பாதுகாக்க உலோக கம்பி வலை பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் வலையில் இருந்த ஒரு சிறிய இடைவெளி வழியே சிறுத்தையின் பாதம் உள்ளே நுழைந்ததாக பூங்கா அதிகாரிகள் கூறினர், வீடியோவிலும் அதனை காண முடிந்தது.
“அந்தப் பெண்ணுக்கு லேசான கீறலுடன் கூடிய காயங்கள் ஏற்பட்டன. முதலுதவிக்குப் பிறகு அவரை மருத்துவமனைக்கு மாற்றினோம். அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று ஒரு அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்குப் பிறகு பூங்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீண்டும் பரிசீலனையில் உள்ளதாகவும், வலை அமைப்புகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
November 18, 2025 7:55 PM IST


