Last Updated:
Bihar Election Result : கடந்த 4 சட்டமன்ற தேர்தல்களில் நடந்தது என்ன? ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளில் வென்றன?.
நாடே எதிர்நோக்கும் பிகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் கடந்த 4 சட்டமன்ற தேர்தல்களில் நடந்தது என்ன? ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளில் வென்றன?. விரிவாக பார்க்கலாம்.
பிகாரில் 20 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக மாறிய நிதிஷ்குமாரை முதலமைச்சராக்கிய 2005ஆம் ஆண்டு தேர்தல் சுவாரஸ்யமானது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் அக்டோபர்- நவம்பரில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜகவுடன் கூட்டணி வைத்த நிதிஷின் ஜேடியூ 139 இடங்களில் போட்டியிட்டு 88 இடங்களில் வென்றது.
2010 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இருந்த ஜேடியூ 141 இடங்களில் போட்டியிட்டு 115 தொகுதிகளில் வென்றது. 2015ஆம் ஆண்டு தேர்தலில் லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியுடன் மகாகத்பந்தன் கூட்டணியில் இணைந்த நிதிஷ், 101 தொகுதிகளில் களம்கண்டு 71 தொகுதிகளை தன்வசப்படுத்தினார். 2020 ஆம் ஆண்டு தேர்தலை மீண்டும் என்டிஏ கூட்டணியோடு சந்தித்த நிதிஷ், 115 இடங்களில் போட்டியிட்டு 43 இடங்களை வென்றார்.
கடந்த 4 தேர்தகளிலும் 3ல் ஜேடியூவுடன் கூட்டணி வைத்து போட்டியிட பாஜக, 2005ஆம் 102 இடங்களில் போட்டியிட்டு 55 இடங்களை வென்றது. 2010ஆம் ஆண்டு 102 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 91 இடங்களையும், 2015ஆம் ஆண்டு தேர்தலில் 157 தொகுதிகளில் களம் கண்டு 53 இடங்களையும் கைப்பற்றியது. 2020 தேர்தலில் 110 இடங்களில் பாஜக போட்டியிட்ட நிலையில் கூட்டணி கட்சியான ஜேடியூ-வை விட 31 இடங்கள் அதிகமாக அதாவது மொத்தம் 74 இடங்களை தன் வசப்படுத்தியது.
இருப்பினும் ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 2005ஆம் ஆண்டு தேர்தலில் களமிறங்கிய ராஷ்டிரிய ஜனதா தளம் 175 தொகுதிகளில் போட்டியிட்டு 54 இடங்களில் வென்றது. 2010ஆம் ஆண்டு லோக் ஜனசக்தி கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்த ஆர்ஜேடி 168 இடங்களில் போட்டியிட்டு 22 இடங்களை வென்றது. 2015ஆம் ஆண்டு மகாகத்பந்தன் கூட்டணி பலமாக இருந்த நிலையில் அதில் ஆர்ஜேடி 101 இடங்களில் போட்டியிட்டு 80 இடங்களை தன்வசப்படுத்தியது. முந்தைய தேர்தலை விட 58 இடங்களை கூடுதலாக ஆர்ஜேடி வென்றது.
மீண்டும் அதே கூட்டணியில் 2020 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆர்ஜேடி 144 இடங்களில் களம்கண்டு 75 இடங்களை கைபற்றியது. 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 51 இடங்களில் போட்டியிட்டு வெறும்9 இடங்களில் வென்றது. 2010ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரசுக்கு பலத்த அடி விழுந்தது. அந்த தேர்தலில் 243 இடங்களில் போட்டியிட்டு வெறும் 4 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெற்றிப்பெற முடிந்தது. 2015ஆம் ஆண்டு மகாகத்பந்தன் கூட்டணியில் காங்கிரசுக்கு 41 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் 27 இடங்களை அக்கட்சி கைப்பற்றியது. 2020ஆம் ஆண்டு தேர்தலில் 70 இடங்களில் போட்டியிட்ட 19 இடங்களை காங்கிரஸ் வென்றது.
November 13, 2025 12:00 PM IST


