Last Updated:
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வங்கதேச வெளியுறவுத் துறை இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
வன்முறை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு வெளியுறவுத் துறை இந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
வன்முறை வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.
அவர் அந்நாட்டில் இருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டு சர்வதேச தீர்ப்பாயம், ஷேக் ஹசீனா, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததாகக் கூறி அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது.
போராட்டத்திற்கு ஷேக் ஹசீனா தூண்டிவிட்டதாகவும், வன்முறையில் ஏராளமானோர் கொல்லப்படுவதற்கான காரணமாக இருந்த ஒடுக்குமுறைக்கு அவர் உத்தரவிட்டதாகவும் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியது.
ஷேக் ஹசீனா ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக கூறிய தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனிடையே ஹசீனாவுக்கு ஆதரவாக யாரும் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை கண்டதும் சுட, டாக்கா காவல்துறை ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வங்கதேசம் வெளியுறவுத் துறை இந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், “மனித இனத்திற்கு எதிரான குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஒப்படைப்பது இந்தியாவின் கடமை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
November 17, 2025 5:28 PM IST


