Last Updated:
துணை வேந்தர் நியமன வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை, தமிழ்நாடு அரசு, ஆளுநர், பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்டோர் தொடர்பாக முக்கிய நடவடிக்கை.
துணை வேந்தர்கள் நியமன வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான வேந்தர்களை ஆளுநருக்குப் பதில், முதலமைச்சரே நியமிக்க வகைசெய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மூன்று மாதம் கால நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. மேலும் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டத்தை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிராக இருப்பதாக வெங்கடாசலபதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு தடைவிதித்தது.
தங்களின் வாதத்தை முழுமையாக கேட்காமல் சட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாகக் கூறி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதுகுறித்து மத்திய அரசு, ஆளுநர், பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சூரியகாந்த் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
November 17, 2025 9:07 AM IST


