Last Updated:
இன்போசிஸ் நாராயண மூர்த்தி வாரத்தில் 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி, பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வாரத்தில் 72 மணி நேரம் வேலை நேரமாக இருக்க வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மீண்டும் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, உழைப்பால் மட்டுமே வளர்ச்சி கிடைக்கும் என்றார் . மேலும் தனது வாழ்க்கையில் கடுமையாக உழைக்காத எந்த தனிநபரோ, சமூகமோ, நாடோ முன்னேறியதை பார்த்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் முதலில் வாழ்க்கையை பெற வேண்டும் என்றும் பின்னர் வேலை- வாழ்க்கை சமநிலை குறித்து கவலைப்படலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய நாராயணமூர்த்தி, சீனாவில் 9,9,6 என்ற வேலை முறை இருப்பதாக தெரிவித்தார். அதன்படி வாரத்தில் 6 நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பணி நேரம் என்றும் கூறினார். பிரதமர் மோடி கூட வாரத்தில் 100 மணி நேரம் வேலை செய்வதாக குறிப்பிட்ட நாராயணமூர்த்தி, பணிக்கு செல்லும் இளைஞர்கள் இதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதிக நேரம் பணியாற்றுவது தொடர்பாக நாராயண மூர்த்தி கூறியிருக்கும் கருத்து மீண்டும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. மனிதர்கள் ஒன்றும் இயந்திரங்கள் அல்ல என கூறி நாராயணமூர்த்தியின் கருத்துக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
November 18, 2025 2:57 PM IST


