Last Updated:
“மத்திய கிழக்கில் நடந்து வரும் ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் போருக்கும் தொடர்பில்லை”
இந்தியாவில் பாராசிட்டமால் மற்றும் ஆன்டிபயாடிக் உள்ளிட்ட 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்கிறது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் அறிவிப்பின்படி, இந்த விலை உயர்வு சுமார் 0.65% ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விலை உயர்வு மிகக் குறைவாகவே உள்ளது.
இந்த விலை ஏற்றத்திற்கும், தற்போது மத்திய கிழக்கில் நடந்து வரும் ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் போருக்கும் தொடர்பில்லை என இந்திய மருந்துத் தொழில் கூட்டமைப்பின் ஆலோசகர் வினோத் கலானி தெரிவித்துள்ளார். மாறாக மூலப்பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மருந்து
இதுகுறித்து பேசியுள்ள வினோத் கலானி, “தற்போதைய நிலவரம் குறித்து மத்திய அரசு நன்கு அறிந்துள்ளது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இந்த விலை உயர்வு 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது. இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தடுப்பதற்காக ‘டீம் இந்தியா’ அணுகுமுறையில் மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்படுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்” என்றார்.
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்திற்கு ஏற்ப மருந்து விலைகளை மாற்றியமைக்க மத்திய அரசு அனுமதிப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போதும் மூலப்பொருட்கள், பேக்கேஜிங், போக்குவரத்து செலவுகள் காரணமாக இந்த உயர்வை அரசு அனுமதித்துள்ளது.


