இந்திய ஊழியர்கள் சென்ற லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய ஆடவருக்கு 27 மாதங்கள் சிறைத் தண்டனையும், எட்டு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
33 வயது மதிக்கத்தக்க அவர், அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட இருமடங்கு வேகத்தில் காரை ஓட்டிச்சென்று லாரி மீது மோதினார் என கூறப்பட்டுள்ளது.
இதனால் லாரியின் பின்னால் பயணித்து சென்ற இந்திய ஊழியர்களுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை டான் வெய் ஃபெங் என்ற அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
தண்டனையின் போது இரண்டாவது குற்றச்சாட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று, கல்லாங்-பாயா லெபார் விரைவுச்சாலையில் இந்த சம்பவம் நடந்தது.
மணிக்கு 80 கிலோமீட்டர் என்ற வேக வரம்பில் வாகனங்கள் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ள பகுதியில், டான் மணிக்கு 130 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டிச் சென்றார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தாறுமாறாக அதிவேகத்தில் சென்ற கார், லாரியின் பின்பக்கத்தில் வலது புறமாக மோதி விபத்தை ஏற்படுத்தியதாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறினார்.
இதனால் லாரி, பக்கவாட்டுத் தடுப்புகளில் மோதி, ஒருபுறமாக கவிழ்ந்தது. மேலும், லாரியின் பின்புறத்தில் அமர்ந்திருந்த சில வெளிநாட்டு ஊழியர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் மொத்தம் 12 பேர் காயமடைந்தனர். அதிலும் குறிப்பாக 23 முதல் 41 வயதுக்குட்பட்ட இந்தியாவை சேர்ந்த 9 வெளிநாட்டு ஊழியர்களுக்கு தலை மற்றும் மூளை பகுதியில் காயம், மேலும் மண்டை ஓடு மற்றும் விலா எலும்பு முறிவுகள் உட்பட கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
அதில் கடுமையாக பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது.
லாரி ஓட்டுநர் மற்றும் முன் இருக்கையில் இருந்த மற்றொரு ஊழியர், மேலும் காரில் இருந்த பயணி ஒருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு டான் எந்தவித இழப்பீடும் வழங்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

