Last Updated:
ஆயுதங்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் அதிரடி வளர்ச்சியை உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன.
பாதுகாப்புத் துறையில் இந்தியா அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா, தற்போது உலகின் முன்னணி நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு உற்பத்தி ரூ. 1.78 லட்சம் கோடி என்ற வரலாற்றுச் சாதனை அளவை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியாகும்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி சுமார் 110 சதவீதம், அதாவது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் ராணுவத் தளவாடங்கள், ட்ரோன்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்குப் பிற நாடுகளைச் சார்ந்திருப்பது பெருமளவு குறைந்துள்ளது. உலகளாவிய பாதுகாப்பு சந்தையில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 25வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
கடந்த 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்புப் பொருட்கள் ஏற்றுமதி மட்டும் ரூ. 38,424 கோடியாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக அரசு நிறுவனங்கள் மட்டுமே பாதுகாப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் மொத்த உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பு இதுவரை இல்லாத அளவாக 24 சதவீதத்தை எட்டியுள்ளது. ட்ரோன்கள், ஏவுகணை அமைப்புகள், எலக்ட்ரானிக் வார்ஃபேர் மற்றும் விண்வெளி உதிரிபாகங்கள் தயாரிப்பில் இந்தியாவின் ஹைடெக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்தியா தற்சமயம் உலகின் 85க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் வல்லரசு நாடான அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மொரிஷியஸ், சீஷெல்ஸ், நேபாளம், வியட்நாம், மாலத்தீவு, ஆர்மீனியா, பிலிப்பைன்ஸ், மியான்மர் மற்றும் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் இந்தியாவின் முக்கிய வாடிக்கையாளர்களாக உள்ளன. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் இந்தியாவின் உலகளாவிய தந்திரோபாய உறவுகள் வலுவடைவதோடு, கணிசமான அந்நியச் செலாவணியும் ஈட்டப்படுகிறது.
ஆயுதங்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் அதிரடி வளர்ச்சியை உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன.


