Last Updated:
மிஸ் கோல்ஃப் என அழைக்கப்படும் அந்தப் பெண் யார்? தாய்லாந்தையே ஆட்டம் காண வைத்துள்ள ஹனிட்ராப் மோசடி சம்பவத்தின் முழுமையான பின்னணி என்ன?
தாய்லாந்து நாட்டில் புத்த மதத் துறவிகளை தனது ஹனிட்ராப் வலையில் விழ வைத்து, சுமார் 100 கோடி ரூபாய் பணம் பறித்த Ms GOLF என்ற பெண் போலீசாரிடம் சிக்கியிருக்கிறார். புத்தத் துறவிகளை குறி வைத்து நடத்தப்பட்ட ஹனிட்ராப் மோசடியின் பகீர் பின்னணி என்ன?
தொழிலதிபர்கள் போன்ற பணம் படைத்தவர்களை குறி வைத்து தங்களது பாலியல் வலையில் விழவைத்து நடத்தப்படும் ஹனிட்ராப் மோசடிகள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது நாங்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக தாய்லாந்தில் உள்ள புத்த பிட்சுக்கள் ஏராளமானோர் சிக்கியிருக்கின்றனர். அப்பாட் என அழைக்கப்படும் புத்தப்பிட்சுக்களுக்கான உயர் பதவியில் இருக்கக் கூடிய சுமார் 9 துறவிகளை தனது வலையில் விழவைத்து சுமார் 100 கோடி ரூபாய் வரை பணம் பறித்திருக்கிறார் ஒரு பெண்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிரபல புத்தத் துறவிகள் மடத்தின் தலைவர் ஒருவர் திடீரென தனது துறவறத்தை விட்டு வெளியேறினார். இந்த தகவல் போலீசார் கவனத்திற்கு சென்றதையடுத்து, துறவியை யாரேனும் மிரட்டினார்களா? அல்லது துறவறத்தை கைவிட நெருக்கடி கொடுத்தார்களா? என்பது குறித்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
மிஸ் கோல்ஃப் என்று அழைக்கப்படும், விலாவன் எம்சாவத் என்ற அந்தப் பெண், கடந்த ஆண்டு அந்த புத்தத் துறவியுடன் உறவு வைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரது குழந்தையை சுமப்பதாக பொய் கூறி, குழந்தை ஆதரவு தொகையாக 72 லட்சம் பாட் கொடுக்க வேண்டும் எனக் கோரி மிரட்டியிருக்கிறார். அதன்பிறகுதான் அவர் தனது துறவறத்தை விட்டு வெளியேறியதாகத் தெரியவந்தது. அந்தப் பெண் வசித்து வந்த நோந்தபுரி பகுதியில் உள்ள வீட்டில் பாங்காக் போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.
இவை அனைத்தும் துறவிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டவை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை வைத்து விசாரணை நடத்தியதில் மிஸ் கோல்ஃப், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், இதே முறையில் 9 துறவிகளை மிரட்டி 385 மில்லியன் பாட் பணத்தைப் பறித்திருக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 100 கோடி ரூபாய் எனத் தெரியவந்துள்ளது. பிடிபட்ட பெண்ணிடமிருந்து பெரும்பாலான பணத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
அப்பெண்ணின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகளில், துறவிகளுக்கு மிரட்டல் விடுத்த ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தாய்லாந்து புத்த மத அமைப்பை உலுக்கியுள்ளது. தாய்லாந்தின் தேரவாத புத்த மரபின் கடுமையான பிரம்மச்சரிய விதிகளை மிஸ் கோல்ஃபின் இந்த ஹனிட்ராப் சம்பவம் உடைத்தெறிந்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால், அதன் நிர்வாக அமைப்பு துறவற விதிகளை மறு ஆய்வு செய்ய குழு அமைக்க உள்ளது.
விதிகளை மீறும் துறவிகளுக்கு அபராதம் மற்றும் கடுமையான தண்டனைகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்ன், கடந்த ஆண்டு 81 துறவிகளுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பட்டங்களை ரத்து செய்து உத்தரவிட்டார். சமீபத்திய தவறான நடத்தைகள் “பௌத்தர்களின் மனதில் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார். இதுமட்டுமில்லாமல் காவல்துறையினர், இப்படி தவறாக நடந்து கொள்ளும் துறவிகள் குறித்து புகாரளிக்க ஹாட்லைன் தொலைபேசி எண் ஒன்றையும் தொடங்கியுள்ளனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
July 18, 2025 7:33 AM IST
80 ஆயிரம் வீடியோ… ரூ.100 கோடி பணம்.. புத்த துறவிகளை வலையில் விழ வைத்த மிஸ் கோல்ஃப் பெண் யார்?

