Last Updated:
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.7 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யா, ஜப்பான் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின. வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின.
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கி உள்ளன. இது தொடர்பான வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் 8 புள்ளி 7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பான் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கம்சட்கா தீபகற்ப பகுதியில் பூமிக்கு அடியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுகியதால் மக்கள் அச்சமடைந்தனர். கண்ணாடிகள் உடைந்தன.
இந்த நிலநடுக்கம் பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகளையும் விடுத்தது. அமெரிக்க அதிகாரிகள் அலாஸ்காவின் கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கைகளை விடுத்தனர், அதே நேரத்தில் ஹவாய் குறைந்த அளவிலான சுனாமி கண்காணிப்பில் வைக்கப்பட்டது. ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது, நாட்டின் பசிபிக் கடற்கரையை 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
“சுனாமிகள் மீண்டும் மீண்டும் தாக்கும். எச்சரிக்கை நீக்கப்படும் வரை கடலுக்குள் நுழையவோ அல்லது கடற்கரையை நெருங்கவோ வேண்டாம்” என்று ஜப்பானிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில், கம்சட்காவின் சில பகுதிகளில் 3-4 மீட்டர் (10-13 அடி) உயரமுள்ள சுனாமி பதிவாகியுள்ளதாக, அவசரகால சூழ்நிலைகளுக்கான சூழல் உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தீபகற்பத்தின் கரையோரப் பகுதியிலிருந்து மக்கள் விலகிச் செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். ஜப்பானிலும் சுனாமி அலைகள் காணப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல் வெளியாகி உள்ளன.
சுனாமி அலைகள் கடற்கரை பகுதிகளை தாக்கும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. அந்த வீடியோவில் கடல் அலைகள் கடற்கரையில் இருக்கும் படகுகள் மற்றும் மீட்பு பணியில் இருந்தவர்கள் தாக்கும் காட்சிள் இடம் பெற்றுள்ளது.
July 30, 2025 8:08 AM IST