கோலாலம்பூர்:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லங்காவி கடற்பகுதியில் நிகழ்ந்த கொடூரமான படகு விபத்தில் உயிரிழந்த 27 ரோஹிங்கியா அகதிகளின் உடல்கள், இன்று காலை போக்கோக் சேனா, துவாலாங்கில் உள்ள பழைய இஸ்லாமிய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
உயிரிழந்த 13 ஆண்கள் மற்றும் 14 பெண்களின் உடல்கள், கெடா இஸ்லாமிய சமய கவுன்சிலின் (MAIK) நேரடி மேற்பார்வையில் இஸ்லாமிய மதச் சடங்குகளின்படி இன்று காலை 7:30 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டன.
இதுகுறித்து கெடா மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா கூறுகையில், நேற்று இரவு 10 மணிக்குத் தொடங்கிய உடல்களைப் பராமரிக்கும் மற்றும் கொண்டு செல்லும் பணிகள் இன்று காலை 7 மணிக்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த நல்லடக்கம் நடத்தப்பட்டது என்றார்.
“மருத்துவமனையின் ஆலோசனையின் பேரில், ‘தற்காலிகக் கட்டுப்பாட்டு அடக்க முறை’ (Temporary Controlled Burial – TCB) நடைமுறைகளைப் பின்பற்றி இந்த இறுதிச்சடங்குகள் தகுந்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டன,” என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி, மியன்மார், வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த சுமார் 90 சட்டவிரோத குடியேறிகளை ஏற்றி வந்த படகு ஒன்று, மலேசியா-தாய்லாந்து கடல் எல்லைக்கு அருகே நடுக்கடலில் உடைந்து விபத்துக்குள்ளானது. லங்காவி கடற்பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் இருந்தவர்கள் மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக நம்பப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியின் போது, கடலில் இருந்து 27 ரோஹிங்கியாக்களின் உடல்கள் மீட்கப்பட்டு, இங்குள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனையின் தடயவியல் துறைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
இதற்கிடையில், இந்த விபத்துக்கான துல்லியமான காரணம், அவர்கள் பயன்படுத்திய கடல் வழித்தடம் மற்றும் இந்த மனிதக் கடத்தலுக்குப் பின்னால் இருக்கும் மாஃபியா கும்பல் குறித்து, 2007-ஆம் ஆண்டு மனிதக் கடத்தல் எதிர்ப்பு மற்றும் குடியேறிகள் கடத்தல் எதிர்ப்புச் சட்டத்தின் (Atipsom) பிரிவு 26A-இன் கீழ் காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக டத்தோ அட்ஸ்லி மேலும் தெரிவித்தார்.




