Last Updated:
முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே அதாவது 2009 ஆம் ஆண்டிலேயே நோபல் பரிசு பெற்றார்.
8 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு தராதது முட்டாள்தனம் என்கிற ரீதியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
டொனால்ட் டிரம்ப் சமீபத்திய மேடை பேச்சுகளின்போது, தான் பல போர்களைத் தடுத்ததாகவும், பல நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தியதாகவும் தொடர்ந்து கூறி வருகிறார். குறிப்பாக, அப்ரஹாம் உடன்படிக்கை மூலம் இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகளுக்கு இடையே உறவை மேம்படுத்தியது தனது மிகப்பெரிய சாதனையாக அவர் கருதுகிறார்.
குறிப்பாக அவர் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தான் தான் முடிவுக்கு கொண்டு வந்ததாக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் முன்பே கூறி வந்தார். இருப்பினும், வெனிசுலாவில் ஜனநாயகம் மலரவும், சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அமைதி வழியில் போராடியதற்காகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடேவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் பேசிய டொனால்டு ட்ரம்ப், தான் 8 முக்கிய போர்களை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறினார். இவ்வளவு சாதனைகள் செய்தும் தனக்கு நோபல் பரிசு வழங்காமல் விட்டது முட்டாள்தனமானது என்று அவர் நோபல் பரிசை வழங்கி வரும் நார்வே நாட்டைத் தாக்கிப் பேசியுள்ளார்.
ஆனால் டொனால்ட் ட்ரம்ப் எந்த 8 போர்களை நிறுத்தினார் என்பது குறித்து அவர் விளக்கம் தெரிவிக்கவில்லை. வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை, ஐஎஸ்.ஐஎஸ். அமைப்பை வீழ்த்தியது போன்றவற்றை அவர் முன்வைக்கலாம். இருப்பினும், இவை அனைத்தும் முழுமையான அமைதி நிலையை எட்டவில்லை என்பது விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
“8 போர்களை நிறுத்தியும் எனக்கு நோபல் பரிசு தரவில்லை..!” – நார்வேக்கு எதிராக கொந்தளித்த ட்ரம்ப்


