Last Updated:
ரஞ்சி போட்டியில் ஆகாஷ் சவுத்ரி 8 பந்துகளில் 8 சிக்சர், 11 பந்துகளில் அரை சதம் அடித்து உலக சாதனை படைத்தார்; Arunachal Pradesh, Meghalaya அணிகள் போட்டியில் நடந்தது.
எட்டு பந்துகளில் தொடர்ந்து எட்டு சிக்சர் மழை பொழிந்த ஆகாஷ், முதல் தர போட்டியில் 11 பந்துகளில் அரை சதம் விளாசிய வீரர் என்ற உலக சாதனையையும் படைத்துள்ளார்.
ரஞ்சிக்கோப்பை பிளேட் போட்டியில் அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் மேகாலயா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் 8 ஆவது வீரராக களமிறங்கிய ஆகாஷ் குமார் சவுத்ரி அடுக்கடுக்காக பல சாதனைகளைப் படைத்தார்.
அருணாச்சலப்பிரதேச சுழற்பந்து வீச்சாளர் லிமார் காளி தாபியின் ஓவரில் ஆகாஷ் சவுத்ரி 6 சிக்சர்களை பறக்கவிட்டார். அதற்கு முந்தைய ஓவரில் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர் விளாசியிருந்தார். இதனால், 8 பந்தில் 8 சிக்சர்கள் அடித்து வரலாற்றில் இடம்பிடித்தார்.
முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்பு கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி ஆகியோர் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்டிருந்தனர்.
மேலும் தனது அதிரடி ஆட்டத்தால் 11 பந்துகளில் ஆகாஷ் சவுத்ரி அரைசதம் கண்டார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டிலேயே அதிவேக அரைசத வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.
முன்னதாக, 2012இல் இங்கிலாந்தின் வெயின் வைட் 12 பந்துகளில் அரை சதம் விளாசியதே உலக சாதனையாக இருந்த நிலையில், அதனை ஆகாஷ் சவுத்ரி முறியடித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
November 10, 2025 8:58 AM IST


