Last Updated:
79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விழாக் கோலம். பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்திய பொருட்களை பயன்படுத்த வேண்டுகோள்.
79 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நாடே விழாக் கோலம் பூண்டுள்ளது. பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை ஏழரை மணி அளவில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்ற உள்ளார். 2047ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட செயல்பட்டு வரும் அரசு நடவடிக்கையின் அங்கமாக இந்த சுதந்திர தினம், புதிய இந்தியா என்ற கருப்பொருள் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றன. மேலும், ஆபரேஷன் சிந்தூர் வெற்றியும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு நாடு முழுவதிலும் இருந்து 5000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்திய பொருட்களை வாங்கிப் பயன்படுத்த அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், உள்நாட்டில் தேவை அதிகரித்துள்ள நிலையில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாகவும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இவை அனைத்தும் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதை காட்டுவதாக பெருமிதம் தெரிவித்தார். அரசின் சீர்திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பொருளாதார மேலாண்மை ஆகியவற்றின் மூலம் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும் என்றும் கூறினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுக் கட்டடங்கள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன. டெல்லியில் உள்ள இந்தியா கேட் மின் விளக்குகளால் ஜொலித்தது. இதுபோல் மும்பை சர்ச் கேட் ரயில்நிலையம் மற்றும் பங்குச் சந்தை கட்டடங்கள் மின் விளக்கு அலங்காரத்தால் இரவிலும் மின்னின.
இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவுவாயிலிலேயே நிறுத்தி பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களில் தேசியக் கொடி வண்ணத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது. இதேபோன்று மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் இரவு முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
August 15, 2025 6:59 AM IST


