எனவே, நல்ல கிரெடிட் ஸ்கோர் மட்டுமே போதுமானதாக இருக்காது. உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு வங்கிகள் வேறு சில காரணிகளையும் கருத்தில் கொள்வார்கள். அவை என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
உங்களுடைய வருமானத்திற்கும், நீங்கள் வாங்கி இருக்கும் கடனுக்குமான விகிதம் என்பது ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. வங்கிகள் வழக்கமாக உங்களுடைய மொத்த EMIகள், உங்களது மாத வருமானத்தில் 40 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
ஒருவர் 1 லட்ச ரூபாய் மாத சம்பளம் வாங்கும்போது அவருடைய மொத்த EMIகளுக்கான தொகை 45,000 ரூபாய் எனில், கடன் வருமான விகிதம் என்பது 45 சதவீதமாக இருக்கிறது. இந்த சமயத்தில் 750க்கும் அதிகமான CIBIL ஸ்கோர் வைத்திருந்தாலும்கூட இவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனில் நீங்கள் எவ்வளவு தொகையை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதும் உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்படுவதில் கருத்தில் கொள்ளப்படுகிறது. உங்களுக்கு வழங்கப்பட்ட கடன் உச்சவரம்பில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக நீங்கள் பயன்படுத்தி இருந்தால் அது ஒரு ரிஸ்க்காக கருதப்படுகிறது.
உதாரணமாக 2 லட்ச ரூபாய் கடன் உச்சவரம்பில் நீங்கள் 1 லட்ச ரூபாயை பயன்படுத்தி இருக்கும்போது, நீங்கள் 50 சதவீத கடனை உபயோகித்து இருக்கிறீர்கள். ஆகையால், இதனை கடன் வழங்குனர்கள் ஒரு எச்சரிக்கையாக கருதுவார்கள்.
வலுவான கிரெடிட் ஸ்கோர் மட்டும் போதுமானதாக இருக்காது. கடனை திருப்பிச் செலுத்தியதற்கான ஒரு நீண்ட வரலாறு கொண்ட கடன் பெறுநர்களை வங்கிகள் விரும்புகின்றனர். 6 மாத கிரெடிட் வரலாறு மட்டுமே கொண்ட ஒரு நபர் 750 ஸ்கோர் வைத்திருந்தாலும், 3 வருட தொடர்ச்சியான கடன் பேமெண்ட்கள் கொண்ட 720 கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்கும் நபரையே வங்கிகள் தேர்வு செய்வார்கள்.
ஒரு குறுகிய காலகட்டத்தில் அடிக்கடி கடனுக்கான விண்ணப்பங்களை நீங்கள் சமர்ப்பிக்கும்போது வங்கிகள் சார்பாக செய்யப்படும் ஹார்ட் என்கொயரி உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை தற்காலிகமாக பாதிக்கலாம். 3 மாதங்களுக்குள் 3 விண்ணப்பங்களுக்கும் மேலாக நீங்கள் சமர்ப்பித்தால் உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
மேலும், உங்களுடைய வேலை சம்பந்தப்பட்ட வரலாறும் இங்கு கருத்தில் கொள்ளப்படுகிறது. அடிக்கடி நீங்கள் வேலை மாற்றத்தில் ஈடுபடும் நபர் என்றால் உங்களுடைய விண்ணப்பம் அதிக ரிஸ்க் நிறைந்ததாக கருதப்படுகிறது. 2 வருடங்களுக்குள் 3 அல்லது அதற்கும் அதிகமான பணி மாற்றங்களில் ஈடுபட்ட நபருடைய பொருளாதார நிலை சீரற்றதாக கணக்கிடப்படுகிறது.
கடன் வருமான விகிதத்தை 40% குறைவாக பராமரிக்க வேண்டும். அதேபோல நிலையான வேலை வரலாறு, உங்களுக்கு வழங்கப்பட்ட கடன் லிமிட்டில் 30 சதவீதத்திற்கும் குறைவாக பயன்படுத்துவது மற்றும் நீண்ட கடன் வரலாற்றை அமைப்பது, குறுகிய காலகட்டத்தில் பல்வேறு கடன் விண்ணப்பங்களை தவிர்ப்பது ஆகியவை முக்கியம். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் முக்கியமானதாக இருந்தாலும், இந்த 5 விஷயங்களையும் நீங்கள் செய்யும்போது கட்டாயமாக உங்களுடைய கடன் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும்.
November 05, 2025 3:21 PM IST

