Last Updated:
கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து 4ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில், 22 மாநிலங்களில் இருந்து 450 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சாதனை புரிந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சசிகலா – விஜயகுமார் தம்பதியரின் மகன் பவன்குமார். மத்திய பிரதேசம் குவாலியரில் 50வது ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து 4ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில், 22 மாநிலங்களில் இருந்து 450 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், விழுப்புரம் மாவட்ட கேரம் சங்கத்தைச் சேர்ந்த, விழுப்புரம் தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவர் பவன்குமார் விளையாடினார். தனி நபர் போட்டி மற்றும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய பவன்குமார் தங்கப் பதக்கத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக தேசிய அளவிலான கேரம் போட்டிக்கு தகுதி பெற்று பவன்குமார் பதக்கம் வென்றுள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன் வீரர் பவன்குமார், நான் ஐந்தாவது படிக்கிறதுல இருந்து கேரம் விளையாட ஆரம்பிச்சிட்டேன். என்னோட அண்ணன் புவனேஷ் விளையாடுறத பார்த்து தான் கேரம் விளையாடுறது கத்துக்கிட்டேன். அண்ணன் ஒரு ஸ்டேட் பிளேயர், அதனால என்னவோ எனக்கும் கேரம் ரொம்ப பிடிச்சு போச்சு. அப்போ ஆரம்பிச்ச நான் இப்போ வரைக்கும் கேரம் விளையாடிட்டு இருக்கேன். ஸ்கூல் முடிஞ்சதுமே நேரா வந்தவுடனே கேரம் போர்டுல தான் கைய வைப்பேன். வீட்லயும் எனக்கு நல்ல சப்போர்ட் பண்ணாங்க. அப்படியே படிப்படியாக சரியான பயிற்சியை என்னுடைய மாஸ்டர்ஸ் கொடுத்தாங்க.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் கேரம் போர்டு தான் விளையாடுவேன். எல்லாருமே சொல்லுவாங்க விளையாடிட்டே இருக்காத, படிப்பிலும் கவனம் செலுத்து என சொல்வார்கள். ஆனால் இரண்டையும் சரியான முறையில் பேலன்ஸ் செய்ததாக பவன் குமார் தெரிவித்தார். அதனால்தான் என்னால் படிப்பும் சரி விளையாட்டிலும் சரி தொடர்ந்து வெற்றி பெற்று வர முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இப்போ சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்த 50வது ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாட்டிற்காக தங்கப் பதக்கமும், தனிநபர் போட்டியில் ஜூனியர் ஆண்கள் பிரிவில் ஒரு கோப்பை மற்றும் ஒரு தங்கப் பதக்கத்துடன் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக பெருமை பொங்க பவன்குமார் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இப்போ வரைக்கும் இந்த ஏழு வருஷத்துல 21 gold medal, 4 silver medal, Bronze medal வாங்கி இருக்கேன், எனக்கு ஒரே ஒரு ஆசைதான் என்னோட பெரிய கனவும் அதுதான்…கண்டிப்பா இன்டர்நேஷனல் லெவல்ல நடக்கிற கேரம் விளையாட்டுல கலந்து அதுல ஜெயிக்கணும். அதுதான் என்னுடைய பெரிய லட்சியமே என கூறும் பவன்குமார் அதுக்கான எல்லா முயற்சியும் செய்வேன் என நம்பிக்கையுடன் பவன் குமார் தெரிவித்தார்.
November 19, 2025 1:59 PM IST

