சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள திபெத் பிராந்தியத்தில், வியாழக்கிழமை (22) இரவு 10.33 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) 7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் தொடர்பான உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
திபெத்தின் வடக்குப் பகுதியில் உள்ள நாக்சு (Nagqu) பிராந்தியத்தின் உயரமான மலைப்பகுதியில், பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்க மையத்தைச் சுற்றியுள்ள 5 கிலோமீற்றர் பகுதிக்குள் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 4,864 மீற்றர் உயரம் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஜனவரிக்குப் பின்னர் சீனாவில் ஏற்பட்ட மிக வலுவான நிலநடுக்கம் இதுவென சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அப்பகுதியில் தெளிவாக உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்தின் தலைநகரான லாசாவிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.
இதற்கு முன்னர், 2010ஆம் ஆண்டு அண்டை மாகாணமான கிங்காயில் (Qinghai), யுஷு (Yushu) பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் 2,698 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 300 பேர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

