கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் இனாம் வீராபூர் கிராமத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன் என்ற இளைஞர், ஹூப்பள்ளியில் உள்ள கல்லூரியில் பயின்று வந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த மான்யா பாட்டீல் என்பவரும் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சிறு வயது முதலே அறிமுகம் ஆன இருவரும், கல்லூரி சென்றபோது நட்பு ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பின்னர், அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டவர்கள், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் போட்டோக்கள், வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். இது, பெண் வீட்டாருக்கு தெரிந்ததும் கண்டித்துள்ளனர். அதிலும், இருவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிப்பு கிளம்பியுள்ளது. இதனால், விவேகானந்தன் மாணவியிடம் இருந்து சற்று விலகிச் செல்ல முற்பட்டுள்ளார்.
ஆனால், தன்னை திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மான்யா கூறியுள்ளார். காதலி தனது நிலைப்பாட்டில் ஸ்ட்ராங்காக இருந்ததால் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். இது தொடர்பாக பெண் வீட்டார் பிரச்சினை செய்துள்ளனர். மான்யா 19 வயதானவர் என்பதால், போலீசார் பெண் வீட்டாரை சமாதானம் செய்து வைத்துள்ளனர். இருந்தபோதும், தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதை உணர்ந்த காதல் ஜோடி, ஊரை விட்டு வெளியேறி 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவேரி மாவட்டத்தில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலையில், மான்யா பாட்டீல் 7 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். கர்ப்பமாக இருந்ததால், தங்களது குடும்பத்தினரால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று கருதியுள்ளார். இதையடுத்து, தம்பதி இருவரும் கடந்த 8 ஆம் தேதி, சொந்த ஊரான இனாம் வீராபூர் கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். இருந்தபோதும், தனது மகளை பார்த்த பெற்றோர் சற்றும் கோபம் குறையாமல் முறைத்துக் கொண்டே திரிந்துள்ளனர்.
ஒரே ஊரை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை, மான்யா திருமணம் செய்ததால் உறவினர்கள் அவரின் பெற்றோருக்கு கொம்பு சீவிக் கொண்டே இருந்துள்ளனர். இது, எரிகிற சாதி தீயில் எண்ணெய் ஊற்றியது போல் இருந்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பெண்ணின் தந்தை பிரகாஷ், தனது உறவினர்களுடன் விவேகானந்தனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர்கள், ஆயுதங்களுடன் வருவதை பார்த்த விவேகானந்தன் விவசாய நிலத்திற்குள் தப்பியோடி மறைந்துள்ளார்.
பின்னர், அங்கிருந்து சென்ற கும்பல், எப்படியும் இன்றைக்குள் சம்பவம் செய்ய வேண்டும் என்ற கோபத்துடன் மாலை 6 மணியளவில் மீண்டும் திரும்பி வந்துள்ளனர். அப்போது, வீட்டில் இளம்பெண் மான்யா மற்றும் அவரது மாமனார், மாமியார் மட்டும் இருந்துள்ளனர். இரும்பு பைப் மற்றும் மண்வெட்டியுடன் வீட்டிற்குள் புகுந்தவர்கள், வயதானவர்கள் என்றும் பார்க்காமல் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இந்நிலையில், இதை தடுக்க வந்த மான்யாவை, கர்ப்பிணி என்றும் பார்க்காமல் அவரது தந்தை இரும்பு பைப்பால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். தொடர்ந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள், வீட்டையே சூறையாடிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அதைக் கண்டு அதிச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உயிருக்கு போராடிய கர்ப்பிணி உட்பட மூன்று பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில், 7 மாத கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரின், மாமனார், மாமியாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் தந்தை பிரகாஷ் உட்பட மூன்று பேரை கைது செய்தனர். மேலும் எஞ்சிய நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை, நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் பெற்ற தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

