ஜெலுபு,
ஜாலான் ரொம்பின் 25வது கிலோமீட்டர் சாலையோரத்தில் தனது 6 வயது மகனை கொலை செய்ததாகத் தந்தை மீது இன்று ஜெலுபு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
36 வயதான இ-ஹெய்லிங் ஓட்டுநர் எம்.அருண்குமாருக்கு, நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை புரிந்ததாகத் தலையசைத்து சுட்டிக்காட்டினார்.
கொலை வழக்குகள் உயர்நீதிமன்றத்திற்குட்பட்டவை என்பதால், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
குற்றச்சாட்டுப்படி, கடந்த ஜூலை 23ஆம் தேதி காலை 9.02 மணி முதல் பிற்பகல் 12.55 மணி வரையிலான நேரத்தில், ஜாலான் ரொம்பின் சாலையோரத்தில் உள்ள 25வது கிலோமீட்டரில் தனது மகனை அருண்குமார் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டு, குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை அல்லது அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படிகள் வழங்கப்படும்.
அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் ரஸ்யிடா மூர்னி அட்ஸ்மி, சவப்பரிசோதனை, இரசாயன, தடயவியல் மற்றும் டி.என்.ஏ. அறிக்கைகள் பெற தேவையான காரணமாக, வழக்கு மேலதிக விசாரணைக்காக மாற்றப்படவேண்டும் என கோரினார். இதன்பேரில், நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் தேதி சரம்பான் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒதுக்கியது.
மகனை காணவில்லை என கூறி கடந்த ஜூலை 24ஆம் தேதி ஜோகூரில் உள்ள தாமான் புக்கிட் இண்டா பகுதியில் புகார் அளித்திருந்த அருண்குமாரின் மகன், பின் ஜெம்புல் வட்டாரத்தின் ரொம்பின் பகுதியில், ஜூலை 28ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.




