கோலாலம்பூர்:
கம்போங் பெலடோக் (Kampung Beladok) பகுதியில், உறவினர் வீட்டுக்குச் சென்ற 10 வயதுச் சிறுவன் அப்துல் ரஃப்கா அஸ்கா அப்துல்லா, புதரில் மறைந்திருந்த பிரம்மாண்ட மலைப்பாம்பை கவனிக்காமல் மிதித்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்தது.
நேற்று முன்தினம் (ஜனவரி 8, 2026) அதிகாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
சுமார் 6 மீட்டர் (20 அடி) நீளமும், 50 கிலோ எடையும் கொண்ட ராட்சத மலைப்பாம்பை சிறுவன் தவறுதலாக மிதித்துள்ளான், மிதித்தவுடன் கோபமடைந்த அந்தப் பாம்பு, மின்னல் வேகத்தில் அவனது காலைக் கவ்வி, உடல் முழுவதும் சுற்றி வளைத்தது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவனது அண்ணன் முகமட் நுக்மான் (26) மற்றும் உறவினர் ரம்ஸி முகமது அமின் (57) ஆகியோர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவனை மீட்டனர்.
பாம்பின் பிடியிலிருந்து தம்பியை இழுக்க முயன்றபோது, இருவரும் தரையில் விழுந்தனர். பாம்பு நுக்மானையும் சுற்ற முயன்றது. அவர் உடனடியாக வந்து பாம்பின் வாயைத் தன் கைகளால் பலமாகத் திறந்து பிடித்துக் கொண்டார். பின்னர் ஒரு கூர்மையான இரும்புக் கம்பியைப் பயன்படுத்திப் பாம்பின் பிடியைத் தளர்த்தினார்.
சுமார் 30 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, அந்தப் பாம்பு சிறுவனை விடுவித்தது.
சிறுவனின் வலது காலில் ஆழமான பற்கள் பதிந்து ரத்தம் வழிந்தது. அவன் உடனடியாக பெக்கான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றான். தற்போது அவன் நலமாக உள்ளான்.
கிராம மக்களால் பிடிக்கப்பட்ட அந்தப் பாம்பு, பின்னர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பருவமழை காலங்களில் புதர்கள் மற்றும் ரப்பர் தோட்டங்களிலிருந்து பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வரக்கூடும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.




