Last Updated:
ஹரியானா மாநிலம் சோனிபட்டில், பெண்ணின் கையில் இருந்த 6 மாதக் குழந்தையை பிட்புல் நாய் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் சோனிபட் நகரில் உள்ள சிக்கா காலனியில், 6 மாத பெண் குழந்தையை அவரது அத்தை கையில் தூக்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அருகில் உள்ள வீட்டில் வளர்க்கப்படும் பிட்புல் நாய் ஒன்று திடீரென வீட்டை விட்டு வெளியே எகிறிக் குதித்து ஓடி வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையுடன் சென்ற பெண்ணை நோக்கி பாய்ந்த அந்த நாய், குழந்தையை குறிவைத்து பாய்ந்துள்ளது.
நாய் வேகமாக பாய்ந்து வந்ததைப் பார்த்ததும் அதிர்ந்துபோன அந்த பெண், குழந்தையுடன நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் குழந்தையை தனது வாயால் கவ்விய பிட்புல் நாய், சாலையில் குழந்தையை இழுத்துச் சென்றது. குழந்தையை விடுவிக்க பெண் போராடியபோதும், நாய் தொடர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து குழந்தையை மீட்க முயன்றுள்ளனர்.
ஆனால், குழந்தையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த நாயை அங்கிருந்தவர்கள் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகே விரட்டியடித்தனர். இந்தப் பதறவைக்கும் காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. நாயின் தாக்குதலில் 6 மாத குழந்தையின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. முகம், வயிறு, கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய் கடித்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக குழந்தையை சோனிபட் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக ரோத்தக் நகரில் உள்ள P.G.I.M.S. மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அங்கு குழந்தையின் வயிற்றில் ஏற்பட்ட காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சுமார் 20 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, குழந்தையை தாக்கிய பிட்புல் நாய்கள் தொடர்பாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சிக்கா காலனியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் இரண்டு பிட்புல் நாய்களை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. நாய்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அக்கம் பக்கத்தினர் ஏற்கனவே எச்சரித்ததாகவும், சம்பவத்திற்குப் பிறகு அந்த நாய்களை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பச்சிளம் குழந்தையை வளர்ப்பு நாய் திடீரென தாக்கிய சம்பவம் சோனிபட் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளில் ஆபத்தான வகை நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.


