ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஹரியானா, ஆகிய மாநிலங்களிலும், டெல்லி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 58 தொகுதிகளில் பெருமளவு அசம்பாவிதங்கள் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணி முதல் பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதேபோல் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஜனநாயக கடமை ஆற்றினார். டெல்லியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது மனைவி சுதேஷ் தன்கருடன் சென்ற ஜெகதீப் தன்கர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தனர்.
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி புவனேஷ்வரில் உள்ள வாக்குச்சாவடியில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது வாக்கினை பதிவு செய்தார். இதேபோல், பிஜு ஜனதா தளம் கட்சியின் நிர்வாகி வி.கே.பாண்டியன், புவனேஷ்வரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வாக்களித்தார். அவரது வருகையால் வாக்குச்சாவடி மையமே திக்குமுக்காடியது.
பாஜக எம்.பியும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர், டெல்லியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் டெல்லியில் வாக்களித்தார். தொடர்ந்து பேட்டியளித்த அவர், ஜனநாயக நாடாக இந்தியா இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
