புனே: ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மகளிருக்கான உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ நடத்தவுள்ளது.
இந்திய மகளிர் அணி சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் இந்திய மகளிர் அணி விளையாடிய நிலையில் அதற்கு வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில் மகளிருக்கான டொமஸ்டிக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ நடத்தவுள்ளது. மகளிருக்கான டொமஸ்டிக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது.
தற்போது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் 28 முதல் புனேவில் சீனியர் இன்டர் ஜோனல் மல்டி-டே டிராபி என்கிற தொடரை நடத்தப்போவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐயின் இந்த அறிவிப்பு இந்திய வீராங்கனைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அமிதா சர்மா, “பிசிசிஐ எடுத்த இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தேசிய அணி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கியுள்ள தற்போதைய நிலையில் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் உள்நாட்டு அளவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும். மண்டல மட்டத்தில் மட்டுமல்லாமல், மாநில அளவில் டொமஸ்டிக் போட்டிகளை நடத்த வேண்டும்” என்று வரவேற்றுள்ளார்.
புனேவில் மார்ச் 28ல் தொடங்கும் தொடரை மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் நடத்துகிறது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் வடகிழக்கு மண்டலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளன. 2018 சீசனில் இரண்டு நாட்டல் என்ற அளவில் போட்டிகள் நடைபெற்ற நிலையில், தற்போதையை தொடரில் இது மூன்று நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மார்ச் 17-ம் தேதி மகளிர் பிரீமியர் லீக் முடிந்துவிடும் என்பதால் அதன்பிறகு இந்தப் போட்டிகள் தொடங்கப்படும்.