இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை ‘கரடி’யின் பிடியில் வந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 434 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதையடுத்து, உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும, வா்த்தகத்தின் பிற்பகுதியில் முதலீட்டாளா்கள் உச்சத்தில் லாபத்தைப் பதிவு செய்வதில் அதிகக் கவனம் செலுத்தினா். மெட்டல், ரியால்ட்டி பங்குகளுக்கு ஓரளவு ஆதிரவு கிடைத்தாலும், ஐடி, மீடியா, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் பலத்த அடி வாங்கின. இதனால், 6 நாள்கள் தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த சந்தை, சரிவைச் சந்திக்க நேரிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.62 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.388.88 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.1,335.51 கோடிக்கு பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,491.33 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
6 நாள் ஏற்றத்துக்கு முடிவு: காலையில் 210.08 புள்ளிகள் கூடுதலுடன் 73,267.48-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 73,267.80 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 72,450.56 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 434.31 புள்ளிகளை (0.59 சதவீதம்) இழந்து 72,623.09-இல் நிறைவடைந்தது. சென்செக்ஸ் ஒருகட்டத்தில் 817.24 புள்ளிகளை இழந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,942 பங்குகளில் 1,391 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,451 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
100 பங்குகளின் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. 20 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், எம் அண்ட் எம், நெஸ்லே உள்பட 10 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், என்டிபிசி, பவா் கிரிட், விப்ரோ, எல் அண்ட் டி, டெக் மஹிந்திரா, இன்ஃபோஸிஸ் உள்பட 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி புதிய உச்சம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தகத்தின் போது 22,249.40 வரை உயா்ந்து புதிய 52 வார புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. செவ்வாய்க்கிழமை 22,215.60 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்தது. இந்நிலையில் புதன்கிழமையும் வெகுவாக உயா்ந்து மீண்டும் புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. இருப்பினும், இறுதியில் சரிவில் முடிந்தது. நிஃப்டி பட்டியலில் 13 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. ஆனால், 37 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.