International
oi-Nantha Kumar R
காபூல்: ”எனக்கு மொத்தம் 4 மனைவிகள்.. 70க்கும் அதிகமான குழந்தைகள் பிறந்தது. ஆனால் இறந்த குழந்தைகள் போக இப்போது 58 குழந்தைகள் தான் உயிருடன் இருக்கின்றனர். அவர்கள் அனைவரின் பெயர் கூட எனக்கு தெரியாது. தினமும் வீட்டில் சாப்பாட்டுக்கு கூட கஷ்டமாக இருக்கு. உணவு கஷ்டப்பட்டு இருப்போம் என்று தெரிந்திருந்தால் இவ்வளவு குழந்தைகளை பெற்றிருக்க மாட்டேன்” என கூலாக சொல்லுகிறார் இந்த முகமது சாதிக்.

இந்த முகமது சாதிக் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர். இவருக்கு மொத்தம் 4 மனைவிகள். ஒவ்வொருவரையும் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.
ஆப்கானிஸ்தானில் குழந்தை திருமணங்கள் சர்வசாதாரணமாக நடக்கிறது. மேலும்ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்வதும் நடைமுறையில் உள்ளது. இதற்கு முகமது சாதிக்கும் விதிவிலக்கல்ல.
இதனால் தான் திருமண வயதை எட்டுவதற்கு முன்பாகவே 4 பெண்களை முகமது சாதிக் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்தது முதல் அவரது வீட்டில் தொடர்ந்து குழந்தைகள் பிறந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது வரை 4 மனைவிக்கும் சேர்த்து மொத்தம் 70க்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளன.
இதில் பல குழந்தைகள் மரணித்த நிலையில் தற்போது 58 குழந்தைகளுடன் முகமது சாதிக் வாழ்ந்து வருகிறார். இதுபற்றி அவர் ‘பிபிசி குளோபல் உமன்’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ”முகமது சாதிக் தனது மனைவிகள் மூலமாக 70க்கும் அதிகமான குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது 58 குழந்தைகள் தான் உயிருடன் உள்ளன. கடைசி குழந்தை பிறந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகிறது.
முகமது சாதிக் வீட்டில் வறுமை தலைவிரித்தாடுகிறது. வறட்சியான பகுதி என்பதால் மரவிறகுகள் அங்கு அதிகம் கிடைப்பது இல்லை. கடைகளில் விறகுகள் வாங்கினால் செலவாகும். இதனால் வீட்டு சமையலுக்கு விறகு கிடையாது. காகிதங்களை எரித்து சைமயல் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் சில குழந்தைகளுக்கு மட்டுமே உணவு வழங்க முடிகிறது.
இதனால் பெரும்பாலான குழந்தைகள் பசி, பட்டினியால் தவித்து வருகின்றன. இந்த மொத்த குடும்பமும் மண் வீட்டில் தான் வசிக்கிறது. வீட்டிற்கு கதவுகள், ஜன்னல்கள் கிடையாது. குளிரை தாங்க வீட்டை சுற்றி திரைகள் மட்டுமே போடப்படுகிறது. குழந்தைகளுக்கு செருப்பு கிடையாது.
முகமது சாதிக் கார் டீலர்ஷிப் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு ஒரு காரை விற்பனை செய்தால் 1,000 ஆப்கானிஸ் சம்பளமாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,450) கிடைக்கும். இந்த குறைந்த சம்பளத்தை வைத்து கொண்டு குடும்பம் நடத்துகிறார் முகமது சாதிக்” என கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி முகமது சாதிக் கூறுகையில், ”எனக்கு 4 மனைவிகள் 70க்கும் அதிகமான குழந்தைகள் பிறந்தது. ஆனால் இப்போது 58 குழந்தைகள் தான் உயிருடன் இருக்கிறார்கள். இந்த குழந்தைகளின் பெயர்களும் எனக்கு தெரியாது. இதனால் ஒவ்வொரு குழந்தையையும் மகன், மகள் என கைநீட்டி தான் அழைப்பேன். உண்மையில் நான் எனது குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யவில்லை. அன்றாட உணவுக்கே குழந்தைகள் கஷ்டப்படுவார்கள் என்று தெரிந்திருந்தால் நான் இவ்வளவு குழந்தைகளை பெற்றிருக்கமாட்டேன்” என கூறியுள்ளார்.

