Business
oi-Vigneshkumar
மும்பை: கடந்த சில நாட்களாகவே இந்தியாவின் ஏஐ நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மரண அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. ஏஐ காரணமாக ஐடி நிறுவனங்கள் பாதிக்கும் என்ற எதிர்பார்ப்பில் சுமார் 55% வரை பங்குகள் சரிந்துள்ளன. இவ்வளவு சரிந்த பிறகும் கூட நாட்டின் பல முக்கியமான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஐடி நிறுவனங்களின் பங்குகளை தொடர்ந்து வாங்கியே வருகின்றன. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
இந்தியாவில் 1990களில் நடந்த உலக மயமாக்கலுக்கு பிறகு ஐடி செக்டார் மிக பெரியளவில் வளர்ச்சி அடைந்தது. பல்வேறு நிறுவனங்கள் ஐடி துறையில் நுழைந்து மிக பெரிய நிறுவனங்களாக வளர்ந்தன. இதன் மூலம் பல கோடி இளைஞர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

ஐடி நிறுவனங்கள்
இப்போதும் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஐடி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. குறிப்பாக ஏற்றுமதியில் ஐடி செக்டாருக்கு முக்கிய இடம் இருக்கிறது. இந்தச் சூழலில் தான் ஏஐ வருகை இந்திய ஐடி நிறுவனங்களைப் பாதிக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. சில ஆண்டுகளாகவே இந்த பேச்சு இருந்தாலும் இப்போது அது மார்கெட்டில் நேரடியாக எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.
மரண அடி
கடந்த சில நாட்களில் மட்டும் இந்தியப் பங்குச்சந்தைகளில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ளன. டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்.சி.எல் என எல்லா பங்குகளுமே சரிந்துள்ளன. குறிப்பாக நாட்டின் மிக பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் பங்கு விலை, 2024 ஆகஸ்டில் இருந்த அதன் உச்ச விலையிலிருந்து சுமார் 55% சரிந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் அது 36% வீழ்ச்சி கண்டுள்ளது. அதேபோல இன்போசிஸ் பங்கு அதன் வரலாற்று உச்சத்திலிருந்து 47% சதவிகிதமும் ஹெச்.சி.எல் பங்கு அதன் உச்ச விலையிலிருந்து 43% வீழ்ச்சி கண்டுள்ளது.
பொதுவாகவே எந்தவொரு நிறுவனமும் இவ்வளவு தூரம் சரிந்தால் பலரும் அதன் பங்குகளை வாங்க மாட்டார்கள். ஆனால், இந்த முறை ஐடி நிறுவனங்கள் சரிந்தாலும் சில மியூட்சுவல் பண்டு நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு அந்த பங்குகளை வாங்குகிறார்கள். குறிப்பாக PPFAS மியூச்சுவல் பண்ட் நிறுவனம் ஜூன் மாதத்தில் இந்த 3 ஐடி நிறுவனங்களின் பங்குகளைக் கணிசமாக வாங்கியுள்ளது. குறிப்பாக இன்போசிஸ் நிறுவனத்தின் 54 லட்சம் பங்குகள், ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 31.15 லட்சம் பங்குகள், டிசிஎஸ் நிறுவனத்தில் 18.26 லட்சம் பங்குகளையும் கூடுதலாக வாங்கியுள்ளது.
வாங்கி குவிப்பு
ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்பது தொடர்பாகவும் PPFAS மியூச்சவல் பண்ட் நிறுவனத்தின் முதலீட்டுப் பிரிவு தலைமை அதிகாரி ராஜீவ் தாக்கர் விளக்கியுள்ளார். ஏஐ டூல்களை காரணமாகச் சொல்லி நிறுவனங்களின் பங்குகளை விற்கிறார்கள். ஆனால், ஏஐ என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் இன்னும் தெளிவு இல்லை. ஐடி நிறுவனங்களுக்கு இப்போது வருவாய் தான் முக்கியம். AI காரணமாக சாப்ட்வேர் உருவாக்கும் முறை மாறலாம். ஆனால் மார்கெட் தேவைகளைப் புரிந்து, அதற்கேற்ப சாப்ட்வேர் உருவாக்கி, பராமரிக்கும் பணிகள் தொடர்ந்தும் தேவைப்படும்” என்றார்.
மேலும் ஐடி நிறுவனங்களுக்கு இன்னொரு பெரிய பிளஸ் பாயிண்ட் இருக்கிறது. அதுதான் டாரல் வருமானம். அதாவது பெரும்பாலான இந்திய ஐடி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் தான் இருக்கிறார்கள். எனவே, வருமானம் டாலரில் தான் வரும். இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதால், டாலரில் வருமானம் அதிகரிக்கவில்லை என்றாலும் ரூபாயில் லாபம் சீராக அதிகரிக்கும். இதுவும் ஒரு கூடுதல் ப்ளஸ் பாயிண்டு!
தெளிவு இல்லை
ஏஐ பொறுத்தவரை அது ஐடி துறையை எப்படி பாதிக்கும் என்பதில் இன்னுமே தெளிவு இல்லை. ஒரு தரப்பினர் மொத்தமாக ஐடி துறையைப் புரட்டு போடும் என்கிறார்கள். அதேநேரம் இன்னொரு தரப்பினர் ஆடோமேஷன் காரணமாக சில பிரிவுகள் மட்டுமே பாதிக்கப்படும். அதேநேரம் ஏஐ சார்ந்த புதிய வாய்ப்புகள் உருவாகும் என்கிறார்கள். இதில் தெளிவற்ற சூழல் இருப்பதாலேயே ஐடி நிறுவனங்கள் மரண அடி வாங்கி வருகின்றன.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ள கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.



